
மதுரை: வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 14 சதவீத அளவுக்கு வண்டல் படிந்துள்ளது. தென்மாவட்ட அணைகளில் வண்டல் படிவுகளின் அளவுகள் கணக்கெடுக்கப்பட்டும் இதுவரை துார்வாரப்படவில்லை.
வைகை அணையை துார்வாருவது குறித்து பத்தாண்டுக்கு மேலாக கணக்கெடுப்பு நடந்து வருகிறது. ஆய்வுகள், மறுமதிப்பீடு செய்யப்பட்டு வருகின்றவே தவிர எந்த அரசும் அணையை துார்வார முன்வரவில்லை. 2018ல் கடைசியாக கொடுத்த மதிப்பீட்டின் படி துார்வாருவதற்கு முன்பாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியிலிருந்து மண் எடுப்பதற்கு வசதியாக ரோடு அமைக்க ரூ.9 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. இது மட்டுமே அரசு செய்ய வேண்டிய செலவு. மண்ணை விற்றால் கிடைக்கும் வருவாய் ரூ.201 கோடி என கணக்கிடப்பட்டது. ஆனால் பணி நடக்காமலேயே போய்விட்டது.
தற்போது தி.மு.க., ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் மீண்டும் வைகை அணை துார்வாருவதற்கான மறுமதிப்பீடு தயார் செய்யப்பட்டது. அணையிலிருந்து தேனி மாவட்டத்தின் பின்னத்தேவன் பட்டி, சொக்கத்தேவன்பட்டி, ஜெயமங்கலம், குள்ளப்புரம், கோவில்பட்டி கிராமங்கள் வழியாக மண்ணை எடுத்துச் செல்வதற்கு வசதியாக ரோடு அமைக்க வேண்டும். இதற்காக ரூ.9 கோடி அரசு செலவு செய்ய வேண்டும். இந்த ரோடுகள் அமைக்க வனத்துறை அனுமதி பெறவேண்டிய அவசியமும் இல்லை. அரசாணை வெளியிட்டால் போதும். அடுத்த கட்ட பணிகள் தயாராகிவிடும்.

விலை குறைந்தது மண்
மறுமதிப்பீட்டில் வண்டல் மண்ணை விற்பதன் மூலம் கிடைக்கும் வருவாய் ரூ.197.83 கோடியாக பொதுப்பணித் துறை குறிப்பிட்டுள்ளது. சுங்கத்துறை மூலம் கடந்த முறை யூனிட் மண் ரூ.441 ஆக இருந்தது, பொதுப்பணித் துறை மூலம் ரூ.400 ஆக குறிப்பிடப்பட்டுள்ளது. அணையின் 71 அடி உயரத்தில் 241 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்டுள்ளது. இதில் 6898 மில்லியன் கனஅடி நீரை தேக்கி வைக்கலாம். ஆனால் 973 மில்லியன் கனஅடி அளவுக்கு அதாவது 14 சதவீத அளவுக்கு வண்டல் படிந்துள்ளது. இன்னும் ஐந்தாண்டுகள் சென்றால் இதன் அளவு அதிகரித்து கொண்டே செல்லும்.
ஆற்றில் மணல் அள்ளுவதற்கு தடை விதித்துள்ள நிலையில் இந்த வண்டல், மண் அவசியமான மாற்றுப் பொருளாகவும் பயன்படுத்தலாம்.ரூ.9 கோடி செலவில் ரூ.200 கோடி வருமானம் கிடைக்கும் என தெரிந்தும் எந்த அரசும் அணையை துார்வார முன்வரவில்லை.
இதேபோன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள், திருநெல்வேலியில் மணிமுத்தாறு அணையும் அமராவதி, ஆழியாறு அணைகளும் துார்வாருவதற்காக திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு கிடப்பில் உள்ளன. வருமானம் என்பதோடு தண்ணீர் இருப்பு வைக்கும் அளவும் குறைகிறது என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2818310