
போர்ட் அவ் பிரின்ஸ்: கரீபியன் கடலில் உள்ள மிகச்சிறிய நாடான ஹைதியில் கடந்த 14ம் தேதி காலையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.2 ஆகப் பதிவானது. ஹைதியின் மேற்கு பகுதிகளை இந்த நிலநடுக்கம் கடுமையாக தாக்கியது. குறிப்பாக தலைநகர் போர்ட் அவ் பிரின்சில் இருந்து 125 கி.மீட்டர் தொலைவில் உள்ள செயின்ட் லூயிஸ் டு சுட் நகரை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கத்தால் வீடுகள், கடைகள், ஓட்டல்கள், தேவாலயங்கள், பள்ளிக்கூடங்கள், ஆஸ்பத்திரிகள், அரசு அலுவலகங்கள் இடிந்து விழுந்தன. இதனால் ஏராளமானோர் கட்டட இடிபாடுகளில் சிக்கினர். நிலநடுக்கம் ஏற்பட்ட அதேநேரத்தில் அந்த பகுதிகளில் கடுமையான மழையும் பெய்தது. இதனால் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி பாதித்தது.

இந்த நில நடுக்கத்தில் முதல்கட்டமாக 724 பேர் பலியானதாக கூறப்பட்டது. இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் பலி எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வந்தது. நேற்று (ஆக., 17) மதியம் வரை 1,941 பேர் நில நடுக்கத்துக்கு பலியானதாக அறிவிக்கப்பட்டது. அவர்களது உடல்கள் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டன. காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 9,900 ஆக அதிகரித்துள்ளது. ஆஸ்பத்திரிகளில் இடம் இல்லாததால் காயம் அடைந்தவர்கள் சிகிச்சை பெறுவதற்காக பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மீட்பு பணிக்காக அமெரிக்க ராணுவத்தின் 8 ஹெலிகாப்டர்கள் விரைந்துள்ளன. தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது.

இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான பொதுமக்கள் தங்கள் வீடுகளையும், உடமைகளையும், சொந்தபந்தங்களையும் இழந்துள்ளனர். பல குழந்தைகள் பெற்றோர்களை இழந்து அனாதைகள் ஆகியுள்ளன. தெருக்களில் குழந்தைகளின் அழுகுரல் கேட்டுக்கொண்டே இருக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உணவு இல்லாமல் பசி, பட்டினியால் தவிக்கிறார்கள்.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2825826