
தமிழ்நாடு பாடநுால் நிறுவன அலுவல் சாரா கல்வி குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள வருமான வரித் துறை அதிகாரி சரவணன் மீது, பலரும் குற்றச்சாட்டுக்களை வைக்கின்றனர்.
இது குறித்து, எழுத்தாளர் பிரபாகரன் கூறியதாவது:பாடத்திட்டம் தொடர்பான ஆலோசனை வழங்க அமைக்கப்பட்டுள்ள குழுவில், சரவணன் இடம் பெற்று இருப்பது, அந்த குழு எப்படி செயல்படும் என்ற, அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இடம் பெறலாமா?
சரவணன், பெண்களை எப்படி அணுகுவார் என்பதற்கு ஏராளமான புகார்கள், சமூக வலைதளங்களிலும், பத்திரிகைகளிலும், ‘மீ டூ’ புகார்களாக வெளியாகி உள்ளன. அதற்கு, இதுநாள் வரை, சரவணனிடம் இருந்து, எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. அவருடையது இடதுசாரி சிந்தனை. அவருடன் தொடர்பில் இருப்பவர்களும், நாட்டுக்கு எதிராக போராடும் மனநிலையில் இருப்பவர்களே. அவர் தன் முகநுால் பக்கத்தில் தொடர்ந்து, பிரதமர் மோடியின் செயல்பாடுகளை விமர்சித்து வருகிறார்.
மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., குறித்து அவர் எழுதிய ‘உடையும் திரைகள்’ என்ற நுாலில், கேவலமாக விமர்சித்திருக்கிறார். இதே குழுவில், பாலகுருசாமி, மயில்சாமி அண்ணாதுரை போன்ற, கல்வியாளர்கள் பலரும் நியமிக்கப்பட்டு உள்ளனர். அப்படிப்பட்ட குழுவில், பெண் குற்றச்சாட்டுக்களுக்கு ஆளான சரவணன் இடம் பெறலாமா?இது, சமூகத்துக்கு நல்லதல்ல. அதனால், குழுவில் இருந்து அவரை நீக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து, சரவணன் கூறியதாவது:மத்திய அரசு பணியில் இருக்கிறேன். என் மீது குற்றச்சாட்டு என்றாலும், என்னை பாராட்டி எழுதுவதாக இருந்தாலும், கருத்து சொல்ல வேண்டும் என்றாலும், உயர் அதிகாரிகள் அனுமதி வாங்க வேண்டும்.
விமர்சனம்
அதனால், இந்த விஷயங்களை உள்வாங்கி கொண்டேன். அரசு உத்தரவுக்கு இணங்க, என் கருத்தாக எதையும் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.
சரவணனின் நண்பர்கள் கூறியதாவது: சரவணன், 2017ல் தான் அரசு பணிக்கு வந்தார். அதற்கு முன், எம்.ஜி.ஆர்., தொடர்பான நுால் ஒன்றின், மொழி பெயர்ப்பு பணியை செய்து கொடுத்தார். அந்த நுாலில் உள்ள கருத்துக்கள், அவருடையது அல்ல. பிரதமர் மோடி குறித்து, முகநுாலில் அவர் கடுமையாக விமர்சித்திருக்கிறார். அது கூட, அவர் பணிக்கு வரும் முன் நடந்தது. அதுமட்டுமல்ல, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையும் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
பெண் தொடர்பான குற்றச்சாட்டு, அவர் இடதுசாரி சிந்தனையாளராக இருப்பதால், கிளப்பி விடப்படுபவை. ஏதாவது ஒரு பெண்ணாவது, அவர் மீது புகார் அளித்திருக்க வேண்டும்.
ஒரே ஒரு முறை
சமூக வலைதளங்களில், அவர் மீது புகார் கூறுபவர்கள், தங்கள் முகம் காட்டி உள்ளனரா? போகிற போக்கில் சொல்லப்படும் குற்றச்சாட்டு இது. அதனால் தான், இதற்கு சரவணன் பதில் சொல்லவில்லை. பாடநுால் நிறுவனத்தில் அலுவல் சாரா கல்வி குழு 2017ல் அமைக்கப்பட்டது. அதில் தான் சரவணனும் இடம் பெற்றார். இதுவரை அந்த குழு, ஒரே ஒரு முறை மட்டும் கூடியிருக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
– நமது நிருபர் –
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2818988