
பொதுத்துறை வங்கிகளின், ‘கிளார்க்’ பணி தேர்வுகள், ஏன் மாநில மொழிகளில் நடத்தப்படவில்லை என்று எழுந்த சர்ச்சைக்கு, முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ஒரு குழுவை நிதி அமைச்சகம் நியமித்துள்ளது.
இந்த ஆண்டு, பாங்க் ஆப் பரோடா, பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் மஹாராஷ்டிரா, கனரா வங்கி, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி, யூகோ வங்கி. யூனியன் பாங்க் ஆப் இந்தியா என, 11 வங்கிகளில் பணியாற்றுவதற்கு, 3,௦௦௦ கிளார்க்குகளை தேர்வு செய்வதற்கான, தேர்வுஅறிவிக்கப்பட்டது. ஐ.பி.பி.எஸ்., என்ற வங்கிப் பணியாளர் தேர்வாணையம் இந்தத் தேர்வை ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் மட்டுமே நடத்துவதாக அறிவித்து இருந்தது.

இந்நிலையில், கர்நாடக காங்., தலைவர் சித்தராமையா, ‘டுவிட்டர்’ வலைதளத்தில் பெரிய கூப்பாடு போட ஆரம்பித்தார். மத்திய – மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்கள் வங்கிகள்வழியாகவே அமல்படுத்தப்படுகின்றன. விவசாயிகள், தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் பலர் வங்கியையே நம்பியுள்ளனர். கன்னட மொழியே தெரியாத வங்கி பணியாளர்களால், கிராமப்புற மக்கள் துன்பத்தை சந்தித்து வருகின்றனர்.

கர்நாடக மாநிலத்தில் இருந்து, ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு பெற்றுள்ள நிர்மலா சீதாராமன் தொடர்ந்து கன்னடர்களுக்கும், கன்னட மொழிக்கும் துரோகம் இழைத்து வருகிறார். இந்தவங்கித் தேர்வு விஷயத்திலும், அவர் அதையே செய்துள்ளார். ராஜ்யசபாவில், கர்நாடகத்தை பிரதிநிதித்துவப்படுத்த அவருக்கு தகுதியே இல்லை. வெட்கம் இருந்தால், அவர் பதவி விலகவேண்டும். இவ்வாறு சித்தராமையா கடுமையாக விமர்சனம் செய்தார்.
மேலும், 2019ல், நிர்மலா சீதாராமன் ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது, ‘வங்கித் துறை தேர்வுகள் இந்திய மொழிகளில் நடத்தப்படும்’ என்று உறுதியளித்தார். அதை ஏன் இப்போது நிறைவேற்றவில்லை என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது. இந்த குற்றச்சாட்டை மறுக்கும் விதமாக, நிதி அமைச்சகம் ஒரு விளக்கம் கொடுத்து உள்ளது. அதன் விபரம் வருமாறு: நிதி அமைச்சர் பேசியது, கிராம வங்கிகளில் மேற்கொள்ளப்படும் ஆளெடுப்பு தொடர்பானது தானே அன்றி, வங்கிப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் தொடர்பானது அல்ல.
உள்ளூர் இளைஞர்களுக்கும், சம வாய்ப்பு வழங்க வேண்டுமென்ற நோக்கில், கிராம வங்கிகளில் உள்ள அலுவலக உதவியாளர்கள் மற்றும் முதல்நிலை அலுவலர்களின் தேர்வுகள் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தோடு, கொங்கினி, கன்னடம் உள்ளிட்ட, 13 இந்திய மொழிகளில் நடத்தப்படும் என்று அரசு அப்போது முடிவு எடுத்தது. அதை நடைமுறைப்படுத்தியும் வருகிறது. தற்போது, பொதுத்துறை வங்கிகளில் உள்ள கிளார்க் பணியிடங்களை நிரப்ப, நடத்தப்பட உள்ள தேர்வுகளை உள்ளூர் மொழிகளில் நடத்த வேண்டும் என்று எழுந்துள்ள கோரிக்கையை பரிசீலிக்க, ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
அடுத்த, 15 நாட்களில் இக்குழு பரிந்துரைகளை அளிக்கும். குழுவின் அறிக்கை கிடைக்கும் வரை, தற்போது வங்கிப் பணியாளர் தேர்வாணையம் நடத்தவிருக்கும் தேர்வுகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு நிதி அமைச்சகத்தின் விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது.
– நமது நிருபர் —
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2804443