
ஓட்டலில் தீ: இருவர் பலி
புதுடில்லி: டில்லியின் துவாரகா பகுதியில் உள்ள ஓட்டலில் நேற்று காலை தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். தீயில் சிக்கி ஓட்டலில் தங்கியிருந்த தீபக் மற்றும் ஒரு பெண் ஆகியோர் உடல் கருகி பலியாயினர். சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்
திரிபுராவில் தாக்குதல்: திரிணமுல் எம்.பி.,க்கள் புகார்
அகர்தலா: திரிபுராவில் காரில் சென்று கொண்டிருந்த போது, மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதாக திரிணமுல் காங்., எம்.பி.,க்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.
திரிபுராவின் தெற்கு பகுதியில் உள்ள பெலோனியா நகரில் காரில் சென்ற போது இந்த தாக்குதல் நடந்ததாக திரிணமுல் காங்.,கின் லோக்சபா எம்.பி., அபருதா போடர் மற்றும் ராஜ்யசபா எம்.பி., டோலா சென் ஆகியோர் தெரிவித்து உள்ளனர். இந்த தாக்குதலில், உதவியாளர் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.
தமிழக நிகழ்வுகள்

லாரி கவிழ்ந்து டிரவைர் பலி
கோத்தகிரி;கோத்தகிரி அரசு போக்குவரத்து கழக டெப்போவுக்கு டீசல் கொண்டுவந்து இறக்கிய லாரி, கோவைக்கு நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தது. கோவையை சேர்ந்த, முருகானந்தம்,55 லாரியை ஓட்டி சென்றுள்ளார்.கோத்தகிரி – மேட்டுப்பாளையம் சாலையில், தட்டப்பள்ளம் பகுதியில் இரவு, 10:30 மணிக்கு, கட்டுப்பாட்டை இழந்த லாரி, 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.இதில், டிரைவர் முருகானந்தம் சம்பவ இடத்திலேயே பலியானார். தீயணைப்பு வீரர்கள், உடலை மீட்டு, கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். கோத்தகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.

கால்வாயில் மூழ்கி 3 பேர் பலி
மதுரை:மதுரை, முனிச்சாலை யைச் சேர்ந்தவர் ராமு;. இவரது மகன் கோபி, 19. பிளஸ் 2 முடித்தவர். இன்னொரு மகன் கிஷோர், 18; பிளஸ் 2 முடித்துள்ளார். நண்பர்கள் ஹரிஹரன், 17; சூர்யகுமார், 15. இவர்கள் உட்பட எட்டு பேர், நேற்று மாலை பெரியாறு பாசன கால்வாய்க்கு குளிக்க சென்றனர்.கால்வாயில் குளித்தபோது நான்கு பேரும் நீரில் மூழ்கினர். மேலுார் தீயணைப்பு வீரர்கள், போலீசார், அப்பகுதி மக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். சூர்யகுமாரை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பினர். கோபி, கிஷோர், ஹரிஹரன் ஆகியோரை சடலமாக மீட்டனர்.
சிறுமியிடம் அத்துமீறிய வாலிபர் மீது ‘போக்சோ
திருப்பூர்:திருப்பூரை சேர்ந்த, 15 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் வீட்டுக்கு அருகே உள்ள அரசு பள்ளியில், பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.சிறுமிக்கு, ‘இன்ஸ்டாகிராம்’ மூலம், திருப்பத்துாரை சேர்ந்த சபரி, 22 என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. ஆசை வார்த்தை கூறி பழகிய சபரி, கடந்த, பத்து நாட்களுக்கு முன் சிறுமியுடன் மாயமானார். புகாரின் பேரில், திருப்பூர் தெற்கு மகளிர் போலீசார் விசாரித்தனர்.சிறுமியை அழைத்து சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரிந்தது. சபரி மீது ‘போக்சோ’ வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

வேன் மீது பஸ் மோதல் இருவர் உடல் நசுங்கி பலி
திண்டிவனம்,-பஞ்சராகி நின்ற வேன் மீது அரசு பஸ் மோதி, இருவர் பலியாயினர்.ஈரோட்டில் இருந்து நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு, பிராய்லர் கோழிகளை ஏற்றிய மகேந்திரா பிக்கப் மினி வேன் சென்னை கிளம்பியது; சண்முகவேல், 33 என்பவர் ஓட்டினார். லோடுமேன்கள் எம்.ஜி.ஆர்., 33; தர்மராஜன், 49 உடன் சென்றனர்
.நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு திண்டிவனம் அருகே, வேனின் முன்பக்க வலது டயர் பஞ்சரானது. சண்முகவேல், எம்.ஜி.ஆர்., கீழே இறங்கி டயரை கழற்றினர். எதிரே வரும் வாகனங்களை எச்சரிக்கும் விதமாக, வேனுக்கு பின்புறம் 10 அடி துாரத்தில் தர்மராஜன் நின்று, மொபைல் போன் டார்ச் லைட் அடித்து கொண்டிருந்தார். அப்போது, மதுரையில் இருந்து சென்னை நோக்கி வேகமாக வந்த அரசு விரைவு பஸ், மினி வேனின் பின்னால் மோதி, சாலையோர பள்ளத்தில் பாய்ந்தது.இதில், டயரை கழற்றிக் கொண்டிருந்த சண்முகவேல், எம்.ஜி.ஆர்., உடல் நசுங்கி உயிரிழந்தனர். பஸ் வேகமாக வருவதை கண்ட தர்மராஜன் விலகி ஓடியதால், உயிர் தப்பினார். பஸ் டிரைவர், கண்டக்டர் காயமடைந்தனர். பயணியர் காயமின்றி தப்பினர்.
தாய் தற்கொலை முயற்சி 2 பெண் குழந்தைகள் பலி
திருச்சி-குடிகார கணவன் மீதான விரக்தியில், இரு பெண் குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று, தற்கொலைக்கு முயன்ற தாய் உயிர் பிழைத்தார்.திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை போதாவூர் பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி முருகபாண்டி, 32; மனைவி சத்யா, 30. தம்பதிக்கு 3 வயது மற்றும் 5 மாதத்தில் பெண் குழந்தைகள் இருந்தன.மது பழக்கம் கொண்ட முருகபாண்டி, வேலைக்கு செல்லாமல், தினமும் குடித்து வந்து, மனைவியிடம் தகராறில் ஈடுபடுவது வழக்கம். நேற்றும் மது அருந்தி, மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.விரக்தி அடைந்த சத்யா, நேற்று மதியம், இரு பெண் குழந்தைகளையும் துாக்கி சென்று, வயல் அருகில் உள்ள மொட்டைக் கிணற்றில் வீசி, தானும் குதித்துள்ளார். தண்ணீரில் மூழ்கி குழந்தைகள் இறந்து விட, கிணற்றில் தத்தளித்த சத்யாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
மாணவியின் மொபைல் போனுக்கு ஆபாச படம் அனுப்பியவர் போக்சோவில் கைது
கோவை:பள்ளி மாணவிக்கு மொபைல்போனில், ஆபாச படங்கள் அனுப்பிய வாலிபரை, போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.கோவையை சேர்ந்த, 14 வயது சிறுமி பள்ளியில் பயின்று வருகிறார். ஆன்லைன் வகுப்புக்காக அவரது பெற்றோர் மொபைல்போன் வாங்கிக் கொடுத்திருந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன், மாணவியின் மொபைல்போனுக்கு அறிமுகமில்லாத எண்ணில் இருந்து, குறுந்தகவல்கள் வந்தன.அதை மாணவி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
கடந்த சில தினங்களுக்கு முன், மாணவிக்கு அந்த எண்ணில் இருந்து ஆபாச படங்கள் வந்தன. மாணவி அப்படங்களை அழித்தார். இருப்பினும் தொடர்ந்து ஆபாச படங்கள் வந்தன.இதுகுறித்து மாணவி, பெற்றோரிடம் தெரிவித்தார். பெற்றோர் போத்தனுார் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். வழக்கு பதிந்த போலீசார், நடத்தியவிசாரணையில், ஆபாச படங்கள் அனுப்பியது கோணவாய்க்கால்பாளையத்தை சேர்ந்த சக்திவேல், 20 எனத் தெரிந்தது.போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில் சக்திவேல், பல பெண்களின் மொபைல் எண்களுக்கு, ஆபாசப்படங்கள் அனுப்பி தொந்தரவு செய்தது தெரிந்தது. போலீசார் சக்திவேலை, போக்சோ வழக்கில் கைது செய்தனர்.
உலக நிகழ்வுகள்
லெபனானில் பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து 20 பேர் பலி
பெய்ரூட்,-மத்திய கிழக்கு நாடான லெபனானில், பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்ததில் 20 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 80 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.லெபனான் நாட்டின் அண்டை நாடான சிரியா எல்லை அருகே உள்ளது லெய்ல் கிராமம். லெபனானில் இருந்து பெட்ரோல், டீசல் ஆகியவை சிரியாவுக்கு கடத்தப்படுகின்றன. அதேபோல், கடத்தி வரப்பட்ட பெட்ரோல் டேங்கர் லாரி ஒன்றை லெபனான் ராணுவம் பறிமுதல் செய்து, லெய்ல் கிராமத்தில் நிறுத்தி வைத்திருந்தது. நேற்று காலை அந்த டேங்கர் லாரி திடீரென வெடித்தது. இதில் 20 பேர் அதே இடத்தில் உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட 80 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.லெபனான் ரெட் கிராஸ் உறுப்பினர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காயமடைந்து உயிருக்கு போராடுபவர்களை காப்பாற்ற, ரத்த தானம் செய்ய வரும்படி பொதுமக்களுக்கு மருத்துவமனை நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
ஹை தியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 724 பேர் பலி
லெஸ் கெயெஸ்-ஹைதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இதில் 724 பேர் பலியானதுடன், 2,800க்கும் மேலானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
வட அமெரிக்க கண்டத்தின் கரீபியன் கடலில் உள்ள தீவு நாடான ஹைதியின் தெற்மேற்கு பகுதியில், நேற்று முன்தினம் இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.மரண ஓலம்ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கடற்கரை நகரமான லெஸ் கெயெஸ் கடும் சேதத்திற்கு ஆளானது.வீடுகள், கட்டடங்கள் அதிர்ந்தன. இதனால் மக்கள் அலறியடித்தபடி வெளியில் ஓடினர். நகரம் முழுதும் ஒரே கூச்சலும், குழப்பமுமாக இருந்தது. அங்கு, 860க்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாக இடிந்தன; 700க்கும் மேலானவை கடும் சேதம் அடைந்தன. அருகருகே இருந்த வீடுகள் ஒன்றின் மீது ஒன்றாக வரிசையாக சரிந்து விழுந்த, ‘வீடியோ’ வெளியாகி மனதை பதற வைத்தது. பள்ளி, தேவாலயம், மருத்துவமனை, அரசு அலுவலகம், ஓட்டல் உட்பட பல கட்டடங்களும் இடிந்து விழுந்தன. இடிபாடுகளுக்குள் சிக்கியவர்கள் மரண ஓலம் எழுப்பினர். எங்கு பார்த்தாலும் உதவிக்குரல்கள் கேட்டன.
பொருளாதாரத்தில் மிக பின்தங்கிய ஹைதியில் கொரோனா பரவல், அதிபர் படுகொலை போன்ற துயரங்களை அடுத்து, நிலநடுக்கம் பேரிடியாக மாறி உள்ளது. மீட்பு பணிகள் உடனடியாக துவங்கிய நிலையில், நேற்று இரவு வரை பலி எண்ணிக்கை 724 ஆக அதிகரித்துஉள்ளது; 2,800க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். எனினும் 700க்கும் அதிகமானோர் பலியாகி விட்டதாக தகவல்கள் வெளியாகின.அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வசதியின்றி மக்கள் தவிக்கின்றனர். பலரும் அருகில் உள்ள நகரங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.
வெப்ப மண்டல புயல்
வீடற்ற ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் தங்கி உள்ளனர். நாடு முழுதும் ஒரு மாத அவசரநிலையை பிரதமர் ஏரியல் ஹென்றி அறிவித்துள்ளார்.’மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், சேதத்தின் அளவு தெரியும் வரை பிற நாடுகளிடம் உதவியை கேட்பதில்லை’ என, பிரதமர் கூறி உள்ளார்.இன்று அல்லது நாளை, ஹைதியை வெப்ப மண்டல புயல் தாக்கக்கூடும் என, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2824145