கண்முன்னே மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்வதைத் தடுக்க நினைத்தும், அளவுக்கதிகமாக குடித்த மதுவால் கணவர் படுத்துத் தூங்கிவிட, அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், கரூர் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

கரூர் மாவட்டம், மாயனூர் காசா காலனியைச் சேர்ந்தவர் மாலதி. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, பெரம்பலூர் மாவட்டம், பாடலூரைச் சேர்ந்த தனசேகரன் என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதிக்கு 4 வயதில் ஆசித் என்ற மகன் உள்ளார். மாலதி, மாயனூரில் தாய் தமிழரசி மற்றும் மகன் ஆசித் ஆகியோருடன் வசித்து வந்தார். அவரது கணவர் தனசேகரன், வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு போதை ஒழிப்பு மையத்தில் மேனேஜராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், தனசேகரன் தனது மகனையும், மனைவியையும் பார்க்க மாயனூர் வந்துள்ளார். அளவுக்கதிமாக மதுகுடித்த மயக்கத்தோடு அங்கு வந்துள்ளார். இந்த நிலையில், கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், வெறுப்படைந்த மாலதி தனது வீட்டில் உள்ள மின்விசிறியில், சுடிதார் துணியில் தூக்குப்போட்டுக்கொண்டு தற்கொலை செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது. அதைப் பார்த்த மாலதியின் மகன் ஆசித், தாய் தற்கொலை செய்ய முயல்வதைக் கண்டு கதறி அழுதுள்ளார். இதனால், முழுபோதையில் இருந்த தனசேகரன் தனது மகன் அழுவதைப் பார்த்து, ‘அழாதே’ என்று அதடியிருக்கிறார்.

ஆசித், மாலதி தூக்கில் தொங்குவதைக் கைகாட்ட, அதைக் கண்ட தனசேகரன் போதையோடு தள்ளாடி போய் மனைவி தூக்கில் தொங்கிய சுடிதார் துணியை அறுத்து மனைவியின் உடலைத் தரையில்போட்டுவிட்டு, மீண்டும் குடிபோதையில் தூங்கியுள்ளார். பின்னர், அவர்களது மகன் ஆசித் அருகில் உள்ளவர்களிடம் தகவல் தெரிவிக்க, பொதுமக்கள் அங்கே குவிந்தனர். மாலதி இறந்து கீழே கிடக்க, அவர் அருகிலேயே தனசேகரும் முழுபோதையில் போதையில் தூங்கியதைப் பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனால், உடனடியாக அங்கிருந்தவர்கள் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த மாயனூர் காவல் நிலைய போலீஸார், தற்கொலை செய்துகொண்டு இறந்த மாலதியின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முழுபோதையில் இருந்ததால், மனைவி தற்கொலை செய்வதை கண்முன் பார்த்தும் தடுக்க முடியாமல் போன சம்பவம், அப்பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
Source: https://www.vikatan.com/news/crime/the-wife-committed-suicide-infront-of-her-drunken-husband