
கோபமான சுப்பிரமணி அருகில் கிடந்த கல்லை எடுத்து சின்னப்பொண்ணுவின் தலையில் போட்டு கொலை செய்திருக்கிறார்.
கரூரில், போதையில் மனைவி தலையில் கல்லைப் போட்டு கொன்ற இளைஞர் ஒருவர், போலீஸுக்கு பயந்து ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கரூர் மாவட்டம், காந்திகிராமம் தெற்கு இந்திராநகர் நாய்க்கர் தெருவில் வசிக்கும் அழகர்சாமி மகன் சுப்பிரமணி. இவரது மனைவி சின்னபொண்ணு. இருவருக்கும் திருமணமாகி, அருண்குமார், அஜித்குமார் என்ற இருமகன்களும், நந்தினி என்ற மகளும் உள்ளனர். குடிப்பழக்கம் உள்ள சுப்பிரமணி தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியோடு சண்டை போடுவார் என்கின்றனர். இந்நிலையில், நேற்று இரவு வழக்கம்போல சுப்பிரமணி குடித்துவிட்டு வந்ததால், இருவருக்கும் தகராறு முற்றியிருக்கிறது. இதனால், கோபமான சுப்பிரமணி அருகில் கிடந்த கல்லை எடுத்து சின்னப்பொண்ணுவின் தலையில் போட்டு கொலை செய்திருக்கிறார்.

அதன்பிறகு, நிலைமை புரிந்து போலீஸுக்கு பயந்து மதுபோதையில் வீட்டுக்கு அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் வந்த சரக்கு வண்டியின் மீது பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இந்தத் தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கரூர் டி.எஸ்.பி தேவராஜ், விசாரணை மேற்கொண்டு பிரேதத்தைக் கைப்பற்றி கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வு மேற்கொள்ள அனுப்பி வைத்தார். அளவுக்கதிகமான மதுபோதையில் மனைவியைக் கொன்றுவிட்டு, இளைஞர் ஒருவர் தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Source: https://www.vikatan.com/news/crime/husband-who-killed-his-wife-committed-suicide-at-karur