
கர்நாடகா சிறையில் இருந்து கொண்டு மும்பையில் உள்ள பில்டர்களை மிரட்டி பணம் பறித்த ரெளடி கைது செய்யப்பட்டார்.
மும்பையில் 2000-ம் ஆண்டு வரை மாஃபியாக்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. அவர்கள் பில்டர்கள் மற்றும் பாலிவுட் பிரமுகர்களுக்கு போன் செய்து மிரட்டு பணம் கேட்பர். கொடுக்கவில்லையெனில் பட்டப்பகலில் சுட்டுக்கொலை செய்துவிட்டு சென்றுவிடுவது வழக்கம். இதனால் ரெளடிகளை போலீஸார் என்கவுண்டர் செய்ய ஆரம்பித்தனர். இதனால் அதிகமான ரெளடிகள் உயிருக்கு பயந்து மும்பையை காலி செய்துவிட்டு வெளிநாடுகளில் சென்று தஞ்சமடைந்தனர். அவர்களில் ஒரு சிலர் மட்டுமே தற்போதும் உயிருடன் இருக்கின்றனர். அவர்களிடன் இருந்தவர்கள் இப்போதும் அடிக்கடி மும்பையில் பில்டர்களிடம் மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.
அது போன்ற ஒரு ரெளடி மும்பை பில்டர்களிடம் மிரட்டி பணம் பறிக்க முயன்று கைது செய்யப்பட்டார். மும்பை காட்கோபர் பகுதியை சேர்ந்த பில்டர் ஒருவருக்கு கடந்த மாதம் சோட்டாராஜன் கூட்டாளி யூசுப் சுலைமான் கத்ரி என்ற தாதா போன் செய்து ரூ.50 லட்சம் கொடுக்கவில்லை எனில் கொலை செய்துவிடுவதாக மிரட்டினார். இது குறித்து சம்பந்தப்பட்ட பில்டர் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். ரெளடி யூசுப் போன் செய்த நம்பர் எங்கிருந்து பேசப்பட்டது என்று பார்த்த போது, அதனை கண்டுபிடிப்பது மிகவும் சிக்கலாகஇருந்தது.
சர்வதேச சாப்ட்வேரை பயன்படுத்தி எங்கிருந்து பேசப்படுகிறது என்பதை கண்டுபிடிக்க முடியாதபடி செய்யப்பட்டு இருந்தது. ஆனாலும் போலீஸார் அந்த போன் எங்கிருந்து வந்தது என்பதை மிகவும் போராடி கண்டுபிடித்தனர். கர்நாடகாவில் உள்ள சிறையில் இருந்து யூசுப் போன் செய்து இருந்தது தெரிய வந்தது. யூசுப் மீது கொலை, கொலை முயற்சி, மிரட்டி பணம் பறித்தல், போலி பாஸ்போர்ட் வைத்திருந்தல் போன்றவை தொடர்பாக கர்நாடகாவின் பல்வேறு இடங்களில் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்தது. இதில் கொலை வழக்கு ஒன்றில் யூசுப் கடந்த 2001-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு கர்நாடகா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அதிலிருந்து சிறையில் இருந்து கொண்டு சர்வதேச சாப்ட்வேர் உதவியுடன் எங்கிருந்து பேசுகிறோம் என்பதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் பில்டர்கள் உட்பட முக்கிய பிரமுகர்களை போனில் மிரட்டி பணம் வசூலிக்கும் வேலையில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

மும்பையிலும் அவர் மீது 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. யூசுப் கர்நாடகா சிறையில் இருப்பது தெரிந்தவுடன் அவரை போலீஸார் மும்பைக்கு அழைத்து வந்துள்ளனர். அவரிடம் விசாரித்த போது பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தது. யூசுப்-க்கு ஹபிபா கான் என்ற பெண் தாதா மும்பையில் உள்ள பில்டர்கள் பற்றிய விபரங்களையும் அவர்களின் போன் நம்பர்களையும் சேகரித்து கொடுத்து வந்தார். ஹபிபா கான் காட்கோபரில் உள்ள பில்டரிடமும் வீடு வாங்குவது போல் சென்று அவரது போன் நம்பரை வாங்கி அதனை கர்நாடகா சிறையில் உள்ள யூசுப்பிற்கு கொடுத்துள்ளார். இது தவிர பிரகாஷ் என்ற மும்பை மாநகராட்சி ஊழியர் ஒருவரும் யூசுப்பிற்கு உதவி செய்து வந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. யூசுப் ஒரு காலத்தில் சோட்டாராஜன் கூட்டத்தில் முக்கிய பிரமுகராக இருந்து தாவூத் இப்ராகிம் அடியாட்களை தீர்த்துக்கட்டுவதில் முன்னனியில் இருந்தார். தனது 16-வது வயதில் யூசுப் ஒருவரை கொலை செய்ய முயன்று சிறுவர் சிறைக்கு சென்றார். வெளியில் வந்த பிறகு சோட்டாராஜனுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு அவனுடன் சேர்ந்து கிரிமினல் செயல்களில் ஈடுபட்டு வந்தார். தயாரிப்பாளர் மகேஷ் கொலை முயற்சி வழக்கிலும் யூசுப்பிற்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.