
சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை மேல் விசாரணைக்கு தடை கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்ட கோவையை சேர்ந்த நிர்மல்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகு மேல் விசாரணை நடத்தக்கூடாது. தாங்கள் சொல்வது போல் வாக்குமூலம் அளிக்கும்படி பல தரப்பில் இருந்து மிரட்டல் வருகிறது. ஏற்கனவே என்னிடம் விசாரணை நடத்திய நிலையில் மேல் விசாரணை நடத்த வேண்டிய அவசியம் இல்லை. என தெரிவித்திருந்தார்.
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், உண்மை குற்றவாளியை கண்டுபிடிக்க மேல் விசாரணை நடத்துவதில் தவறில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் பல மர்மங்கள் உள்ளன. உண்மை குற்றவாளியை கண்டுபிடிக்க மேல் விசாரணை நடத்துவதில் தவறில்லை. கோடநாடு எஸ்டேட் பங்குதாரர் சசிகலா இன்னும் விசாரிக்கப்படாமல் உள்ளார். எந்த நேரத்திலும் விசாரணையை விரிவுபடுத்தலாம். அதன் அடிப்படையில் ஊட்டி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை நீதிமன்றம் ஏற்று கொண்டதாக தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து நீதிபதி நிர்மல் குமார் பிறப்பித்த உத்தரவில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தாலும், உண்மை குற்றவாளியை கண்டுபிடிக்க மேல் விசாரணை நடத்தலாம். வழக்கு தொடர்ந்தவர் புகார்தாரரோ, குற்றவாளியோ இல்லை. சாட்சி மட்டுமே. வழக்கின் எந்த கட்டத்திலும் விசாரணையை விரிவுபடுத்த முடியும் எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2831680