
சென்னையில் உள்ள தனியார் தொலைக்காட்சியின் தலைமை அலுவலகத்தில் தாக்குதல் நடந்துள்ளது. என்ன நடந்தது அங்கே?
சென்னை ராயபுரத்தில் சத்தியம் தொலைக்காட்சி அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு ஆகஸ்ட் 03-ம் தேதி மாலை 7.15 மணியளவில் மர்மநபர் ஒருவர் குஜராத் பதிவெண் கொண்ட காரில் வந்திறங்கியுள்ளார். கையில் கிட்டார் பேக்குடன் அலுவலகத்திற்குள் சென்றுள்ளார். அலுவலக ஊழியர்கள் கேட்டபோது, வேலை நிமித்தமாக வந்துள்ளதாகக் கூறியாதல் அவரை உள்ளே செல்ல அனுமதித்துள்ளனர். வரவேற்பறையில் பேசிக்கொண்டிருந்த நபர் திடீரென தனது கிட்டார் பையில் மறைந்து வைத்திருந்த பெரிய வாள் மற்றும் கேடயத்தை எடுத்து அங்கிருந்த மேஜை, கண்ணாடி, டிவி, கணினி, கதவு என்று அனைத்தையும் உடைத்துச் சேதப்படுத்தினர்.
அங்கிருந்த ஊழியர்கள் யாரவது தடுக்க வந்தால் வெட்டிவிடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக ராயபுரம் காவல்துறைக்குத் தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அவர் கையிலிருந்த வால், கேடயம் மற்றும் அவர் வந்த கார் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து அந்த நபரைக் கைது செய்து காவல்நிலையம் அழைத்துச் சென்றனர். காவல்துறை விசாரித்ததில், அந்த நபர் குஜராத்தில் தொழில் செய்துவரும் கோவையைச் சேர்ந்த ராஜேஷ்குமார் (31) என்பதும். இவர் கோவையில் அரசு மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்ற தர்மலிங்கத்தின் மகன் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தொலைக்காட்சி அலுவலகத்தின் மீது நடைபெற்ற தாக்குதலுக்குப் பல அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். சத்தியம் தொலைக்காட்சியின் தலைமை செய்தியாளர் விஜயகுமார் அளித்த புகாரில் வழக்கு பதிவுசெய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணைக்குப் பின் காவல்துறை சார்பில், “கைதுசெய்யப்பட்ட ராஜேஷ்குமார் கடந்த எட்டு மாதங்களாகக் குஜராத்தில் தனது சகோதரோடு தங்கியுள்ளார். தனக்குப் பிரபஞ்சத்தைக் கட்டுப்படுத்தும் சக்தி இருப்பதாக அதீத கற்பனையுடன் இருந்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்னர் ராஜபாளையத்தில் வெள்ளம் ஏற்படவுள்ளதாகச் அந்தத் சேனலில் ஒளிபரப்பாகியுள்ளது” என்று கூறினார்.
Source: