
சென்னை பம்மலில் கொசுவை விரட்ட வீட்டுக்குள் புகை மூட்டைத்தை ஏற்படுத்தியதால் மூச்சுத்திணறி பெண் மற்றும் சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னையை அடுத்த பம்மல் திருவள்ளுவர் தெரு பொன்னி நகரில் வசித்து வருபவர் புஷ்பலட்சுமி. இவர் நேற்று இரவு குடும்பத்தினருடன் தூங்கியிருக்கிறார். வீட்டுக்குள் கொசுக்களை விரட்ட அடுப்பு கரி மூலம் புகை மூட்டத்தை ஏற்படுத்தியிருக்கின்றனர். பின்னர் வீட்டுக்குள் ஏசியையும் ஆன் செய்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை நீண்ட நேரமாகியும் புஷ்பலட்சுமி வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. அதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப் பார்த்தனர்.
அப்போது வீடு முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளித்தது. இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்றபோது புஷ்பலட்சுமி அவரின் குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மயங்கிய நிலையில் கிடந்தனர். அவர்களை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு புஷ்பலட்சமி உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மற்ற 3 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் விஷால் என்ற சிறுவனும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். அதிவ இதுகுறித்து சங்கர்நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “புஷ்பலட்சுமி, அவரின் குடும்பத்தைச் சேர்ந்த சொக்கலிங்கம், மல்லிகா, விஷால் ஆகியோர் வீட்டுக்குள் தூங்கியுள்ளனர். கொசுக்களை விரட்ட ஏற்படுத்திய புகை மூட்டதால் மூச்சுத்திணறி புஷ்பலட்சுமி உயிரிழந்திருக்கிறார். சொக்கலிங்கம், மல்லிகா, ஆகியோர் சிகிச்சையில் உள்ளனர். சிகிச்சைப் பலனின்றி விஷால் என்ற சிறுவனும் உயிரிழந்தார். இருவரின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடந்துவருகிறது.” என்றனர்.
Source: https://www.vikatan.com/news/crime/in-chennai-police-started-enquiry-on-womans-suspicious-death