
இந்தியாவில் 9 வயது சிறுமிபலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டு அவசர அவசரமாக சுடுகாட்டில் வைத்து தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் இந்த வழக்கு விசாரணை கிரைம் பிரான்ச் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
தெற்கு டெல்லியின் ஓல்டு நன்கால் கிராம பகுதியைச் சேர்ந்தவர் அந்த 9 வயது சிறுமி. சம்பவத்தன்று அதிகாலை 5.30 மணி அளவில் தண்ணீர் பிடிப்பதற்காக அருகேயுள்ள சுடுகாட்டுக்கு சென்றாள். அங்குள்ள தண்ணீர் குளிரூட்டும் சாதனத்தில் இருந்து குளிர்ந்த நீர் பிடிப்பதற்காக சென்றிருக்கிறார் சிறுமி.
வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பாத நிலையில் சுடுகாட்டில் பூசாரியாக வேலை பார்த்து வரும் ராதே ஷியாம் என்ற நபர் மற்றும் அவரது நண்பர்கள் சிலர், சிறுமியின் தாயிடம், சிறுமி இறந்து கிடப்பதாக கூறி அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு தண்ணீர் பிடிக்கக்கூடிய இடத்துக்கு அருகே சிறுமி உயிரிழந்த நிலையில் இருந்தார். மின்சாரம் தாக்கி சிறுமி பலியாகி விட்டதாக கூறிய பூசாரி மற்றும் அவரது நண்பர்கள் உடனடியாக சிறுமியின் உடலை அங்கேயே தகனம் செய்ய ஏற்பாடுகளைச் செய்தனர்.
இதற்கு அந்த சிறுமியின் தாயார் எதிர்ப்பு தெரிவித்தார். உடனடியாக தகனம் செய்ய கூடாது என்று வலியுறுத்தினார். மேலும் அந்த சிறுமியின் கைகள் உள்ளிட்ட உடலின் பல பகுதிகளில் காயங்கள் இருப்பதை கண்ட அந்தத் தாய்க்கு சிறுமி சாவில் மர்மம் இருப்பதாக சந்தேகம் எழுந்தது. சிறுமி உதடு நீல வண்ணத்தில் காணப்பட்டது.
இதை பார்த்து அந்த தாய் அழுது புரண்டார். ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ளாத அந்த நபர்கள் சிறுமியை அங்கேயே உடல் தகனம் செய்து விட்டனர். இதனிடையே தகவல் அறிந்த ஊர் மக்கள் சுமார் 200 பேர் திரண்டு வந்து போராட்டங்கள் நடத்தினர்.
இந்த விவகாரம் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பூசாரி மற்றும் அவரது நண்பர்கள் 6 பேர் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. கொலையான சிறுமியின் கால்கள் மட்டும் எரிபடாத நிலையில் பொலிசாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மற்ற உடல் பாகங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டு இருக்கின்றன. எனவே இந்த வழக்கில் ஆதாரங்களை திரட்டும் பணியில் பொலிசார் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் இவ்வழக்கு விசாரணையை கிரைம் பிரான்ச் பிரிவுக்கு டெல்லி காவல்துறை மாற்றியுள்ளது. இதனிடையே சம்பவத்தன்று சிறுமியின் உடலை வலுக்கட்டாயமாக எரிப்பதற்கு பூசாரி மற்றும் அவரது நண்பர்கள் கூறிய காரணம் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
காவல்துறைக்கு இந்த விஷயம் சென்றால் ஊருக்கே தெரிந்துவிடும். மேலும் காவல்துறை வழக்குப் பதிவு செய்தால் சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்வார்கள் அப்போது அவளது உடல் உறுப்புகளை டாக்டர்கள் திருடி கொள்வார்கள், எனவே சிறுமியின் உடலை இப்போது தகனம் செய்து விடுவது நல்லது என்று கூறி அந்த தாயை ஏமாற்றியுள்ளது தெரியவந்துள்ளது.
Source: https://news.lankasri.com/article/delhi-9-year-old-girl-raped-and-killed-shocking-1628224544