
‘‘எரிந்த நிலையில் பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில், நிறைய தடயங்கள் கிடைத்துள்ளன. ஓரிரு நாளில் குற்றவாளிகளைப் பிடித்துவிடுவோம்’’ என்கிறார், திருப்பத்தூர் எஸ்.பி சிபி சக்கரவர்த்தி.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையை அடுத்த பெரிய கம்மியம்பட்டு-காவேரிப்பட்டு ஆகிய ஊராட்சிகளுக்கு இடையிலுள்ள நேதாஜி நகரில், குட்டாறு தரைப்பாலம் அமைந்திருக்கிறது. புதர்மண்டியிருக்கும், இந்தப் பகுதியின் வழியாக பகல் நேரங்களில் செல்லவும் அப்பகுதி மக்கள் அச்சமடைகிறார்கள். இந்த நிலையில், நேற்று மதியம் ஆடு, மாடுகளை ஓட்டிச்சென்றவர்கள் தரைப்பாலத்தின் அடியிலிருந்து கருகிய துர்நாற்றம் வரவே, சந்தேகமடைந்துள்ளனர். பாலத்தை எட்டிப்பார்த்தபோது அரைகுறையாக எரிந்த சடலத்தைப் பார்த்து, அச்சமடைந்து ஊருக்குள் ஓடிச்சென்று தகவல் கூறினர்.

தகவலின்பேரில், திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி தலைமையிலான ஜோலார்பேட்டை போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சடலத்தைப் பார்வையிட்டனர். இறந்தவர் பெண் என உறுதியானது. அங்கிருந்த தடையங்கைள காவல்துறையினர் சேகரித்தனர்.
இறந்தப் பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. அதேசமயம், கொலை என்பதை மட்டும் உறுதியாகச் சொல்லும் போலீஸார், சடலத்தைப் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளதாகவும் கூறுகிறார்கள். மோப்ப நாய் சிம்பாவும் வரவழைக்கப்பட்டது. சம்பவ இடத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரமுள்ள பெரிய கம்மியம்பட்டு ஊராட்சி ஒன்றியப் பள்ளிக்கு அருகில் ஓடிநின்ற மோப்பநாய் சிம்பா, சந்தேகத்திற்கிடமாக யாரையும் பிடிக்கவில்லை. தடயவியல்துறை நிபுணரும் ஆய்வு செய்தார்.

சம்பவ நடந்த இடத்திலிருந்து, இரண்டு கிலோமீட்டர் தொலைவில், சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை இருக்கிறது. எனவே, வேறெங்கிருந்தோ பெண் கடத்திவரப்பட்டு கொலைச் செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை தொடர்கிறது. பாலியல் வன்கொடுமையும் செய்யப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கும் போலீஸார், சம்பவ இடத்தில் பதிவாகியிருக்கும் செல்போன் உரையாடல்களையும் ஆய்வு செய்துவருகின்றனர். மேலும், காணாமல் போனவர்களின் விவரங்களையும் அனைத்து காவல் நிலையங்களிலும் கேட்டிருக்கிறார்கள். பெண்ணின் உடல் பாகங்களையும் பிரேத பரிசோதனைக்குட்படுத்த வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். இதுகுறித்து, திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி சிபி சக்கரவர்த்தியிடம் கேட்டபோது, ‘‘இது, மிருகத்தனமான சம்பவம். நிறைய தடயங்கள் கிடைத்துள்ளன. தீவிர விசாரணை நடைபெற்றுவருவதால், ஓரிரு நாளில் குற்றவாளிகளைப் பிடித்துவிட்டு சொல்கிறோம்’’ என்றார்.