
சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் அர்த்தநாரீஸ்வரர் சிலை, அனுமன் சிலை, இரண்டு யானை சிலைகள் என 5 சிலைகள் கரை ஒதுங்கின.
சென்னை பெசன்ட் நகர் கடற்கரைக்குட்பட்ட ஒடைக்குப்பம் என்ற ஒடைமாநகர் பகுதியில் நேற்று மாலை சாமி சிலைகள் கரை ஒதுங்கிகிடப்பதாகக் காவல் நிலையத்துக்கு அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீஸார், வருவாய்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். கடற்கரையில் ஒதுங்கியது, அர்த்தநாரீஸ்வரர் சிலை, பீடம், அனுமன் சிலை, இரண்டு யானை சிலைகள் எனவும் அதில் அனுமன் சிலையின் மீது 1875-ம் ஆண்டு எனவும் பொறிப்பட்டிருப்பதாகப் அந்தப் பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து சிலைகளை பழண்டி அம்மன் கோயிலுக்கு பொதுமக்கள் கொண்டு சென்றனர். கடற்கரை பகுதியில் கிடைத்த சிலைகளை வருவாய்துறையினரிடம் ஒப்படைப்பதாக பொதுமக்கள் போலீஸாரிடம் கூறினர். இதையடுத்து வேளச்சேரி தாசில்தார் மணிசேகர் இன்று காலை சம்பவ இடத்துக்கு வந்தார். அவரிடம் சிலைகள் ஒப்படைக்கப்பட்டன. இவைகள் ஐம்பொன் சிலைகளா அல்லது வேறு உலோகத்தால் செய்யப்பட்டவைகளா என ஆய்வு செய்யப்படவுள்ளது. மேலும் கடற்கரை பகுதியில் சிலைகள் ஒதுங்கியிருப்பதால் அவைகள் கடத்தப்பட்டதா என்ற கோணத்திலும் சாஸ்திரி நகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து அந்தப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், “ஓடைமா நகர் பகுதியில் சாமி சிலை ஒன்று கிடப்பதாகத் தகவல் கிடைத்தது. உடனே அங்கு சென்று பார்த்தபோது அடுத்தடுத்து சில சிலைகள் அங்கு கரை ஒதுங்கியிருந்தன. உடனடியாக காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தோம். போலீஸார், சிலைகளை காவல் நிலையத்துக்கு கொண்டு செல்வதாகக் கூறினர். ஆனால் நாங்கள், வருவாய் துறையினரிடம்தான் சிலைகளை ஒப்படைப்போம் எனத் தெரிவித்தோம். உடனடியாக வேளச்சேரி தாசில்தார் அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தோம். தாசில்தார் வர தாமதமானால் அருகில் உள்ள கோயிலில் சிலைகளை வைத்திருந்தோம்.

சிலைகள் கரை ஒதுங்கியிருப்பது குறித்து தண்டோரா மூலம் மக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனால் சிலைகளைப் பார்க்க பொதுமக்கள் அங்கு கூடினர். இதையடுத்து பொதுமக்கள் முன்னிலையில் இன்று காலை தாசில்தாரிடம் சிலைகளை ஒப்படைத்திருக்கிறோம். இந்தச் சிலைகள் எப்படி இங்கு கரை ஒதுங்கியது என்பதை அதிகாரிகள்தான் விசாரிக்க வேண்டும்” என்றனர். ஏற்கெனவே தமிழக கோயில்களிலிருந்து சிலைகள் கடத்தப்பட்டு வெளிநாடுகளில் விற்கப்பட்டிருந்தன. அவற்றை சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் மீட்டுக் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
Source: https://www.vikatan.com/news/crime/god-idols-are-found-at-chennai-besant-nagar-beach