
கைதிகளுக்கு கஞ்சா விற்பனை செய்த புகாரில், வேலூர் சிறைக் காவலர்கள் மூன்று பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
வேலூர் மத்திய சிறையில், கஞ்சா, சிகரெட் போன்ற சிறை விதிகளுக்குப் புறம்பான போதைப் பொருள்களைக் கைதிகள் பயன்படுத்துவதாகவும், சிறைத் துறையினர் சிலரே பணம் பெற்றுக்கொண்டு போதைப் பொருள்களை வாங்கிக் கொடுப்பதாகவும் புகார் வந்துள்ளது. தொடரும் இதுபோன்ற விதிமீறல்களால், வேலூர் சிறை சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. இந்நிலையில், மத்திய சிறைக்கு அருகிலுள்ள சிறைக்காவலர் பயிற்சிப் பள்ளி (பாஸ்டல்) வளாகத்தில், கஞ்சா புழங்குவதாகச் சிறைத்துறை நிர்வாகத்துக்குத் தகவல் கிடைத்தது. கொரோனா பரவலைத் தடுப்பதற்காக புது குற்றவாளிகள் நேரடியாக மத்திய சிறையில் அடைக்கப்படுவதில்லை. இந்த பயிற்சிப் பள்ளி வளாகத்தில் பத்து நாட்களுக்குமேல் தனிமைப்படுத்தப்பட்டுதான் மத்திய சிறைக்கு மாற்றப்படுகிறார்கள்.

பயிற்சிப் பள்ளி வளாகத்துக்குள்ளேயே கஞ்சா பயன்படுத்துவதை அறிந்த சிறைக் கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினி தலைமையிலான சிறைத்துறையினர் அங்கு சென்று தீவிர சோதனை மேற்கொண்டபோது, 50 கிராம் கஞ்சா பொட்டலம் சிக்கியது. இதைத்தொடர்ந்து, சிறைக்காவலர்களிடம் நடத்திய விசாரணையில், தலைமைக் காவலர் இளையராஜா, முதல் நிலைக்காவலர் செல்வகுமார், வார்டன் அஜித்குமார் ஆகிய மூவரும்தான் கஞ்சாவைப் பதுக்கி கைதிகளிடம் விற்பனைச் செய்துள்ளனர் எனத் தெரியவந்தது. இதையடுத்து, தலைமைக் காவலர் உட்பட மூன்று காவலர்களையும் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து உத்தரவிட்டார், சிறைக் கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினி.
Source: https://www.vikatan.com/news/crime/vellore-jail-police-men-were-suspended