
அனுமதியின்றி படப்பிடிப்பு நடத்தியதால் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டான்’ படக்குழு மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ‘டான்’. இதில் எஸ்.ஜே. சூர்யா, பிரியங்கா அருள் மோகன், சமுத்திரக்கனி, சூரி, ஷிவாங்கி, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துவருகிறது.

படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாள்களாக பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை சுற்றுவட்டாரங்களில் நடந்து வருகிறது.
சமீபத்தில் கூட அந்தப் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், ஆனைமலை அருகே படப்பிடிப்புக்காக ‘டான்’ குழு மையமிட்டுள்ளது. சிவகார்த்திகேயன் படத்தின் படப்பிடிப்பு என்ற தகவல் கேட்டு உள்ளூர் மக்கள் ஏராளமானோர் கூடிவிட்டனர்.

இதனால், சம்பவ இடத்துக்கு போலீஸார் விரைந்து வந்தனர். அப்போதுதான், படப்பிடிப்புக்கு எந்த அனுமதியும் வாங்கவில்லை என்பது தெரிந்திருக்கிறது. அது காட்டின் எல்லைக்கு மிக அருகில் உள்ள பகுதி.
மேலும், இது கொரோனா காலம் என்பதாலும் அனுமதி வாங்குவது அவசியம். இதையடுத்து, அனுமதி இல்லாமல் படப்பிடிப்பு நடத்தியது, அதிகளவில் கூட்டம் கூட்டியது போன்ற குற்றங்களுக்காக போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அதன்படி, தொற்றுத்தடை உத்தரவுக்கு கீழ்படியாமை, தொற்றுநோயை கவனக்குறைவாக பரப்பும் செயல், தொற்றுநோய் பரவல் சட்டம் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி உள்ளிட்ட 31 பேர் மீது ஆனைமலை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளளனர். ரூ.19,400 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
Source: https://cinema.vikatan.com/tamil-cinema/fir-filed-against-sivakarthikeyan-don-movie-crew-in-pollachi