
தனது `கிச்சா சுதீப் சாரிட்டபிள் ட்ரஸ்ட்’ மூலம் எளிய மக்களுக்கும், வறுமையான குடும்பப் பின்னணி கொண்ட குழந்தைகளின் கல்வி சார்ந்த விஷயங்களுக்கும் நிறைய உதவிகளைச் செய்து வருகிறார்.
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்,
ஆலயம் பதினாயிரம் நாட்டல்,
பின்னருள்ள தருமங்கள் யாவும்,
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்,
அன்னயாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’
– என்றார் மகாகவி பாரதி.
அப்படி குழந்தைகளின் கல்விக்காக தனது முழு பங்களிப்பைத் தொடர்ந்து செய்துவருகிறார் இந்த நடிகர்.
`நான் ஈ’ திரைப்படத்தில் மிரட்டல் வில்லனாக நடித்து தமிழ் மக்களின் இதயம் கவர்ந்தவர் கன்னட நடிகர் கிச்சா சுதீப்.

நடிகராக மட்டுமல்லாமல் சமூக அக்கறைக் கொண்ட மனிதராகவும் இவர் அறியப்படுகிறார். குறிப்பாக தனது `கிச்சா சுதீப் சாரிட்டபிள் ட்ரஸ்ட்’ மூலம் எளிய மக்களுக்கும், வறுமையான குடும்பப் பின்னணி கொண்ட குழந்தைகளின் கல்வி சார்ந்த விஷயங்களுக்கும் நிறைய உதவிகளைச் செய்து வருகிறார்.
இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக தனது சொந்த ஊரான ஷிவமோகாவில் உள்ள 133 ஆண்டு பழமையான அரசுப் பள்ளி ஒன்றை, சமீபத்தில் இவர் தனது அறக்கட்டளையின் `We for you’ என்கிற திட்டத்தின் கீழ் தத்தெடுத்திருப்பது சமூக ஊடகங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் பரவலான பாராட்டைப் பெற்றிருக்கிறது. இந்தப் பழமையான பள்ளியைச் சேர்ந்த அதிகாரிகளே சுதீப்பின் இந்தச் செயலால் நெகிழ்ந்து போயிருக்கின்றனர்.
இந்த அரசுப் பள்ளியின் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளைப் புதுப்பிக்கும் பணியில் முதலில் கவனம் செலுத்தப் போவதாகவும், அடுத்தடுத்து கல்வியின் தரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கப்போவதாகவும் சொல்லும் சுதீப், சரியானச் சூழலே குழந்தைகளைக் கல்வியில் கவனம் செலுத்த வைக்கும் என்றும் கூறுகிறார்.
இப்படி அரசுப் பள்ளியை கிச்சா சுதீப் தத்தெடுப்பது இது முதன்முறையல்ல. கடந்த ஆண்டு ஜூலை மாதம் கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள நான்கு அரசுப் பள்ளிகளைத் தத்தெடுத்து அப்பள்ளிகளுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார் இவர்.

போதிய அளவு மாணவர்கள் சேர்க்கை இல்லாததால் இந்தியா முழுவதிலும் உள்ள பல அரசுப் பள்ளிகள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன. இதன் காரணமாக, அரசுப் பள்ளியை மட்டுமே நம்பியிருக்கின்ற எளிய குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகளின் கல்விக் கனவுகள் பாதியிலேயே நின்றுவிடுகின்றன என்பதால், கிச்சா சுதீப்பைப் போல பல கன்னட திரைப் பிரபலங்கள் தங்கள் மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளிகளைத் தத்தெடுத்து வருகின்றனர். நடிகை பிரனிதா சுபாஷ் மற்றும் இயக்குநர் ரிஷப் ஷெட்டி போன்றோரும் இதில் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
Source: https://www.vikatan.com/news/india/kannada-actor-kichcha-sudeep-adopts-a-govt-school-in-shivamoga