
கேரளாவில் இருந்து கோவை வருவோர் கண்டிப்பாக கொரோனா பரிசோதனை சான்றிதழ் அல்லது தடுப்பூசி இரண்டு தவணை செலுத்தி அதற்கான சான்றிதழை வைத்து இருக்க வேண்டும்.
கோவை மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கட்டாய கொரோனா பரிசோதனைக்கு பயந்து ஒருவழி சாலையில் வாகன ஓட்டிகள் தப்பி செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் கடந்த 4 நாட்களாக கோவை மாவட்டத்திலும் பரவலாக ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இந்நிலையில் மாவட்டம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதில் முக்கியமாக கேரளாவில் இருந்து கோவைக்கு வரக்கூடிய 13 சோதனைச் சாவடிகளும் கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து கோவை வருவோர் கண்டிப்பாக கொரோனா பரிசோதனை சான்றிதழ் அல்லது தடுப்பூசி இரண்டு தவணை செலுத்தி அதற்கான சான்றிதழை வைத்து இருக்க வேண்டும்.

வாளையாறு சோதனை சாவடி
அவ்வாறு சான்றிதழ் இல்லாமல் வருவோருக்கு சோதனைச்சாவடியிலேயே கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த நடைமுறை இன்று காலை முதல் அமல் ஆன நிலையில் கேரளாவில் இருந்து கோவை வருவோர் பரிசோதனைக்கு அஞ்சி வாளையாறில் இருந்து ஒருவழி சாலையில் தப்பிச் செல்கின்றனர்.
இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே ஒருவழி சாலையில் வாகனங்கள் செல்லாதவாறு போலீசார் தடுப்புகளை அமைத்து கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Source: https://tamil.news18.com/news/tamil-nadu/coimbatore-district-coimbatore-walayar-motorists-fleeing-in-single-lane-on-fear-of-mandatory-corona-testing-aru-520679.html