
ஸ்ரீநகர்: காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால், சுட்டுக்கொல்லப்பட்ட ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் புர்ஹான்வானியின் தந்தை, இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக்கொடி ஏற்றினார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.
கடந்த 2016 ம் ஆண்டு, காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் கமாண்டராக இருந்த புர்ஹான் வானி சுட்டு கொல்லப்பட்டார். அவரது தந்தை முஷாபர் வானி, புல்வாமா மாவட்டம் டிராலில் அரசு பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இன்று(ஆக.,15) சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்வி அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து துறைகளும் தங்களது அலுவலகங்களில் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச அரசு உத்தரவிட்டது. அனைத்து பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும். இது தொடர்பாக முதல்வர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கவேண்டும். தேசியக்கொடி ஏற்றிய வீடியோ, புகைப்படங்களை அனுப்பி வைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, முஷாபர் வானி , தான் பணியாற்றும் பள்ளியில் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். இது குறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ஜம்மு காஷ்மீர் முழுவதும் 23 ஆயிரம் அரசு பள்ளிகள் உள்ளன. ஆனால், பல பள்ளிகளில் தேசியக்கொடி ஏற்றப்படவில்லை.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2823912