
12kW எலக்ட்ரிக் மோட்டார், 80 கிமீ ரேஞ்ச், க்ளவுட் கனெக்டிவிட்டி, பார்க் அசிஸ்ட், ஜியோஃபென்ஸிங், ஆன்ட்டி-தெஃப்ட் வசதி மற்றும் ஸ்மார்ட் போன் சார்ஜிங் வசதி என முன்னணி வசதிகளைக் கொண்டிருக்கும் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டராக இந்த டிவிஎஸ் க்ரியான் இருக்குமாம்.
வாகனங்களின் எதிர்காலம் எலக்ட்ரிக் தான் எனப் பல நிறுவனங்கள் எலக்ட்ரிக் வாகன உற்பத்திக்குத் தயாராகி வருகின்றன. தற்போது டிவிஎஸ் நிறுவனமும் தங்கள் நிறுவனத்தின் எலக்ரிக் வாகனங்களுக்கான திட்டங்களுடன் தயாராகி வருகிறது. இந்தியாவின் மூன்றாவது பெரிய இரு சக்கர வாகன தயாரிப்பாளரான டிவிஎஸ், எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் 1000 கோடி ரூபாயை முதலீடு செய்திருக்கிறது. எலக்ட்ரிக் வாகன உற்பத்திக்கென்று தனிப்பிரிவு ஒன்றும் உருவாக்கப்பட்டிருக்கிறதாம். அடுத்த இரண்டு ஆண்டுகளில் கம்யூட்டர், ஸ்கூட்டர் மற்றும் ஸ்போர்ட்ஸ் என எலக்ட்ரிக் இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனத் தயாரிப்பிற்கு பெரிய லிஸ்ட்டே வைத்திருக்கிறது டிவிஎஸ்.

“கடந்த பத்தாண்டுகளாகவே எலக்ட்ரிக் வாகனங்களில் டிவிஎஸ் நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது. எலக்ட்ரிக் வாகனங்கள் தான் போக்குவரத்தின் எதிர்காலம், அதற்கேற்ப எங்களை நாங்கள் மாற்றிக் கொண்டுள்ளோம். இதனை இந்திய அளவில் எடுத்துச் செல்வோம். எலக்ட்ரிக் வாகனங்களைப் பொறுத்தவரை நாங்கள் முன்னணியில் இருக்கவே விரும்புகிறோம்” எனத் தெரிவித்துள்ளார் டிவிஎஸ் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் சுதர்ஷன் வேணு.
எலக்ட்ரிக் வாகன விற்பனையில் முதல் படியாக ஐ-க்யூப் (iQube) என்ற தங்களது முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பெங்களூரு, சென்னை, கோயம்புத்தூர், டெல்லி மற்றும் புனே ஆகிய நகரங்களில் அறிமுகப்படுத்தியது டிவிஎஸ். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நாடு முழுவதும் பெரு மற்றும் சிறு நகரங்களில் 1000 டீலர்ஷிப்களில் ஐ-க்யூப் கிடைக்கும் எனத் தெரிவித்திருக்கிறது டிவிஎஸ். அதோடு மேலும், க்ரியான் கான்செப்ட் (Creon concept) அடிப்படையில் உருவான புதிய ஸ்கூட்டர் ஒன்றையும் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது டிவிஎஸ்.
க்ரியான் கான்செப்டை 2018 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தியிருந்தது டிவிஎஸ். 12kW எலக்ட்ரிக் மோட்டார், 80 கிமீ ரேஞ்ச், க்ளவுட் கனெக்டிவிட்டி, பார்க் அசிஸ்ட், ஜியோஃபென்ஸிங், ஆன்ட்டி-தெஃப்ட் வசதி மற்றும் ஸ்மார்ட் போன் சார்ஜிங் வசதி என முன்னணி வசதிகளைக் கொண்டிருக்கும் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டராக இந்த க்ரியான் இருக்குமாம்.

எலக்ட்ரிக் வாகனங்கள் அதிகளவில் பயன்பாட்டிற்கு வரவேண்டும் என்றால், அது சார்ந்த கட்டமைப்புகளும் விரைவாக உருவாக்கப்பட வேண்டும். எலக்ட்ரிக் வாகனங்களைச் சார்ஜ் செய்வதற்கான சார்ஜிங் பாயின்ட்களை அமைப்பதற்கு ஏற்கனவே டாடா பவர்ஸ் நிறுவனம் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்துடன் கைகோர்த்திருக்கிறது. டிவிஎஸ்ஸும் ஃபாஸ்ட் சார்ஜிங் பாயின்ட்களை அமைப்பதற்காக பல்வேறு தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
விரைவில் எலக்ட்ரிக் வாகன செக்மென்ட் களைகட்டும் என எதிர்பார்க்கலாம்!