
இதன்மூலம் வேலைசெய்யும் இடத்தில் பாலின சமத்துவம், பன்முகத்தன்மை போன்றவற்றை மேம்படுத்த முடியும் என்று அந்த நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இயங்கிவரும் ஸொமேட்டோ, ஹெவ்லெட்பேக்கர்டு மற்றும் நோவார்டிஸ் போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் தந்தையர்க்கான 26 வார பெட்டர்னிட்டி விடுமுறையை அறிவித்துள்ள நிலையில், தற்போது பிரிட்டிஷ் பன்னாட்டு ஆல்கஹால் தயாரிப்பு நிறுவனமான `டியாஜியோ’வின் இந்தியக் கிளை, பாலின பேதமின்றி தனது அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் சம்பளத்துடன்கூடிய 26 வார குழந்தை வளர்ப்பு விடுமுறையை வழங்கி அசத்தியுள்ளது.

கருவுறுதல், வாடகைத்தாய் அல்லது தத்தெடுத்தல் என்று இப்படி எந்த முறையில் குழந்தை பெற்றுக்கொண்டாலும் டியாஜியோவின் ஊழியர்கள் இந்தக் குழந்தை வளர்ப்பு விடுமுறையைப் பெற முடியும். இதன்மூலம் வேலைசெய்யும் இடத்தில் பாலின சமத்துவம், பன்முகத்தன்மை போன்றவற்றை மேம்படுத்த முடியும் என்று அந்த நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இதற்கு முன் இதே நிறுவனம் அரசின் விதிமுறைகளுக்கு ஏற்ப தன்னிடம் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய 26 வார மகப்பேறு விடுமுறையை அளிக்க ஆரம்பித்தது. அதுமட்டுமல்லாமல் கருவுறுதல், வாடகைத்தாய் அல்லது தத்தெடுத்தல் போன்ற வழிகளில் குழந்தையைப் பெற்றுக்கொண்ட தந்தையர்க்கு நான்கு வார விடுமுறையையும் அளித்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் தற்போது டியாஜியோ நிறுவனம் பாலின பேதமின்றி இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
டியாஜியோ நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களில் புதிதாகத் தந்தையானவர்கள், தத்தெடுத்த குழந்தைக்கு தந்தையானவர்கள் என்று ஒவ்வொருவரும் இதன்மூலம் தங்கள் குடும்பத்துக்கு வரும் புதுவரவுடன் எந்தவித அலுவலக அழுத்தமுமின்றி மகிழ்ச்சியுடன் நேரம் செலவிடலாம். குழந்தை பிறந்த அல்லது குழந்தையைத் தத்தெடுத்த ஓர் ஆண்டுக்குள் இந்த ஊதியத்துடன்கூடிய விடுமுறையை எடுத்துக்கொள்ளலாம் என்றும், 2021-ம் ஆண்டு ஜூலை 30-ம் தேதி முதல் இந்த அறிவிப்பு அமலுக்கு வருமென்றும் டியாஜியோவின் இந்தியப் பிரிவு தெரிவித்துள்ளது.

`குழந்தையைக் கவனித்துக்கொள்வது என்பது தாயின் கடமை மட்டுமே என்கிற பழைமைவாத சிந்தனையை உடைத்து, பெண்களை அவர்களின் இலக்குகளை நோக்கித் தொடர்ந்து பயணப்பட வைக்க நாங்கள் எடுத்திருக்கும் ஒரு முயற்சிதான் இது’ என்கிறது இந்நிறுவனம். இது ஒருபுறமிருக்க, LGBTQ பிரிவைச் சேர்ந்தவர்களும் தங்கள் குழந்தைக்கான தாய், தந்தையராக மகிழ்வுடன் செயல்படவும் ஊதியத்துடன்கூடிய இந்த விடுமுறை அவர்களுக்கு உதவும் என்றும் இந்திய டியாஜியோ நிறுவனத்தின் தலைமை மனித வள அதிகாரி ஆரிப் ஆஸிஸ் கூறியிருக்கிறார்.
மொத்தத்தில் தாய்மை என்பது பாலினம் சார்ந்த ஒரு விஷயமல்ல, அது ஓர் உணர்வு என்பதை இந்த உலகுக்கு உரக்கச் சொல்லியிருக்கிறது டியாஜியோவின் இந்த அறிவிப்பு.