
விமானப் பயணத்தில் கமாண்டர்தான் முக்கிய முடிவுகளைத் தீர்மானிக்கும் அதிகாரம் படைத்தவர். அந்தப் பொறுப்பில் கலக்கும் சோனியா, துரத்தும் குடும்ப பொறுப்புகளைச் சமாளித்து, உயரப் பறக்க நினைக்கும் பெண்களுக்கு இன்ஸ்பிரேஷன்.
அதிக சவால்கள் நிறைந்தது விமானப் போக்குவரத்துத்துறை. மிகக் குறைவான அளவிலேயே பெண்கள் பணியாற்றும் இந்தத் துறையில், உயர் பொறுப்பில் கலக்கும் சோனியா ஜெயின், தமிழகத்தில் ஜெயின் சமூகத்திலிருந்து பைலட் பொறுப்புக்குச் சென்ற முதல் நபர். விமானப் பயணத்தைப் பொறுத்தவரை, கோ-பைலட் மற்றும் கமாண்டர் ஆகியோர் மட்டுமே விமானத்தை இயக்கும் பிரதான பைலட்டுகள். இவர்கள் இருவரில், கமாண்டர்தான் முக்கிய முடிவுகளைத் தீர்மானிக்கும் அதிகாரம் படைத்தவர். அந்தப் பொறுப்பில் கலக்கும் சோனியா, துரத்தும் குடும்ப பொறுப்புகளைச் சமாளித்து, உயரப் பறக்க நினைக்கும் பெண்களுக்கு இன்ஸ்பிரேஷன். வெள்ளைச் சீருடையில் மிடுக்குடன் வந்து அமர்ந்தவருக்கு, தொடர் சவால்களே எனர்ஜியைக் கூட்டுகின்றன.
“காலையில 5 – 7 மணிவரை விமானப் பயிற்சி, பிறகு படிப்புனு ஸ்கூல் படிச்ச காலத்துலேயே பிஸியா இருந்தேன். 19 வயசுல இந்த வேலைக்கான படிப்பையும் பயிற்சிகளையும் முடிச்சேன். 2006-ல் இந்தியாவுல அரசு மற்றும் தனியார் விமான சேவையில முன்னணியில் இருந்த நாலு நிறுவனங்கள்லயும் வேலை கிடைச்சது. குடும்பத்தினருக்காக, அமெரிக்கா உள்ளிட்ட தொலைதூர நாடுகளுக்கு விமானங்களை இயக்கும் வாய்ப்புகளைத் தவிர்த்துவிட்டேன்.
இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துல இப்பவரை வேலை செய்யுறேன். என் தம்பியின் பைலட்டாகும் கனவுக்கு ஊக்கம் கொடுத்தேன். அந்த அனுபவத்துலதான் இந்தத் துறையை என் கரியரா தேர்ந்தெடுத்தேன். `வீட்டுல ஒரு பைலட் இருந்தால்தான் மதிப்பு’னு சொன்ன தம்பி, எனக்காக அவனோட இலக்கை மாத்திகிட்டு, ஏரோஸ்பேஸ் இன்ஜினீயரா வெளிநாட்டுல வேலை செய்யுறான்” என்று மகிழ்ச்சியுடன் கூறுபவர், பணிச்சூழல் குறித்த சுவாரஸ்யமான அனுபவங்களைப் பகிர்கிறார்.
“வேலைக்குச் சேர்ந்த புதுசுல இந்தப் பணிச்சூழல் பெரும் வியப்பா இருந்துச்சு. ஏர்ஹோஸ்டஸ் உட்பட இந்தத் துறையிலுள்ள பல பிரிவினரும், விதிமுறைப்படி என்னை `மேம்’னு கூப்பிட்டாங்க. அதனால ரொம்பவே தர்மசங்கடமா இருந்ததுடன், இந்த வேலை எவ்வளவு மதிப்பானதுனு அப்பதான் புரிஞ்சுகிட்டேன். பயிற்சி விமானியா இருந்த காலத்துலயே, விமானப் பயணத்தின்போது அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் என்னை ஊக்கப்படுத்தினாங்க. அதனாலேயே, குடும்பத்துல எத்தனையோ நிர்ப்பந்தங்கள் வந்தபோதும், இந்த வேலையிலிருந்து விலகும் முடிவை நினைச்சுக்கூட பார்க்கல.
விமான நிலைய ஓடுபாதை காய்ந்த நிலமா இருக்குறதுதான் சிறந்தது. மாறாக, ஈரப்பதமோ, தண்ணீர் தேங்கியிருந்தாலோ, விமானப் பயணத்தைத் தொடங்குறதும், தரையிறக்குறதும் ரொம்பவே சவாலாகும். அந்த நேரங்கள்ல சூழ்நிலையை சாதுரியமா சமாளிக்கலைன்னா, விமானத்தின் டயர் வழுக்கலாம் அல்லது டயர் வெடிக்கலாம். ஓடுபாதையிலிருந்து கிளம்பியதும், விமானத்தின்மீது பறவைகள் மோதாம கவனமா பார்த்துக்கணும். பத்தாயிரம் அடி உயரத்துக்கு மேல போனதும், பறவைகள் தொந்தரவு இருக்காது. வெளிநாடுகளா இருந்தா, சராசரியா மணிக்கு ஆயிரம் கிலோமீட்டர் வேகத்துல விமானத்தை இயக்குவோம்.
தூரத்தைப் பொறுத்து, விமானத்தை இயக்குற வேகம் மாறுபடும். ஒரே வழித்தடத்துல நேரெதிர் திசையில விமானங்கள் வருவதைத் தவிர்ப்போம். இதுபோன்ற சூழல்கள்ல, எதிரெதிர்லயோ, ஒரே திசையிலயோ விமானங்கள் போகும் பட்சத்துல, ஒரு விமானத்துக்கும் மற்றொரு விமானத்துக்கும் இடையே குறைந்தபட்சம் ஆயிரம் அடி இடைவெளி இருப்பதை உறுதிசெய்வோம். விமானத்தைத் தரையிறக்குறப்போ ஏதாச்சும் சிக்கல் வந்துச்சுன்னா, உடனடியா வேறு விமான நிலையத்துல விமானத்தைத் தரையிறக்குவோம். சென்னை பெருவெள்ளம், வர்தா புயல்னு பல்வேறு தருணங்கள்ல இதுபோன்ற சவாலான சூழல்களை எதிர்கொண்டிருக்கேன்.
கோ-பைலட்டா இருந்தப்போ, ஒருமுறை சென்னையிலிருந்து குவைத்துக்கு விமானத்தை இயக்கினேன். குவைத்துல மணல் புயல் (sand storm) ஏற்படவே, சுத்தமா பாதையே தெரியல. பக்கத்து ஊரிலிருந்த மற்றொரு விமான நிலையத்துல விமானத்தை இறக்க ஆயத்தமானோம். அங்கு ஓடுபாதை முழுக்க வெள்ளம். சுத்தமா வெளிச்சமே தெரியாத நிலையில, விபத்து ஏற்படாத வகையில விமானத்தைப் பாதுகாப்பா இறக்கிட்டாலும், கதவைத் திறக்க முடியாத அளவுக்கு நீர் சூழ்ந்திருந்துச்சு.
வெள்ளத்தை அப்புறப்படுத்தும்வரை, நாலு மணி நேரம் விமானத்துலயே காத்திருந்தோம். பிறகு, விமானத்தை இயக்கி பத்திரமா குவைத்ல பயணிகளை இறக்கிவிட்டோம். அரைநாளுக்கும் மேல் இருக்கையில இருந்தபடியே உடன் இருந்த கமாண்டரும் நானும் பயணத்தை நிறைவு செஞ்சோம். ஒவ்வொரு நாளும் விமானப் பயணத்தைத் தொடங்கும்போது, எங்களை நம்பியிருக்கும் பயணிகளைப் பத்திரமா உரிய இடத்துல இறக்கி விடணும்ங்கிறது மட்டுமே எங்களோட பிரதான நோக்கமா இருக்கும்” – துணிச்சலான அனுபவத்தைப் பகிரும் சோனியாவின் பேச்சில் அக்கறையும் பொறுப்புணர்வும்.
“விமானப் போக்குவரத்துத் துறையில, 40 வயதைக் கடந்தவங்களுக்கு ஆறு மாதங்களுக்கு ஒருமுறையும், அதுக்குக் குறைவான வயதினருக்கு வருஷத்துக்கு ஒருமுறையும் மாஸ்டர் ஹெல்த் செக்அப் செய்வாங்க. அப்போ, சிக்கலான உடல்நலப் பாதிப்புகள் இருந்துச்சுன்னா, அதைச் சரிசெய்த பிறகுதான் மறுபடியும் பணியைத் தொடர முடியும். இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம், ஏர் இந்தியா நிறுவனத்துடன் இணைஞ்சு இயங்குது. ஏர் இந்தியா நிறுவனம் மூலமா ஆசிய, ஐரோப்பிய நாடுகளுக்கான தொலைதூர விமானங்களையும் இயக்குறதுக்கான வாய்ப்புகள் எனக்கு விரைவில் கிடைக்கலாம்“ என்று பெருமிதத்துடன் கூறி முடித்தார்.
Source: https://www.vikatan.com/news/women/flight-commander-soniya-jain-shares-her-inspiring-story