
புதுடில்லி: ‘ஜான்சன் அண்டு ஜான்சன்’ நிறுவனம் தயாரித்துள்ள ஒரு ‘டோஸ்’ மட்டும் செலுத்தக்கூடிய தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு மத்திய அரசிடம் ஒப்புதல் அளித்து உள்ளது.
நம் நாட்டில் ‘கோவிஷீல்டு, கோவாக்சின்’ தடுப்பூசிகள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. ரஷ்யாவை சேர்ந்த ‘ஸ்புட்னிக் – வி’ தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் பல்வேறு நிறுவனங்களும் அனுமதி கோரி விண்ணப்பித்து வருகின்றன.

சர்வதேச மருந்து தயாரிப்பு நிறுவனமான ஜான்சன் அண்டு ஜான்சன், ஒரு டோஸ் மட்டும் செலுத்தக்கூடிய கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளது. இந்த தடுப்பூசி 85 சதவீத செயல்திறனுடன் இருப்பது, பல்வேறு நாடுகளில் நடத்திய சோதனையில் தெரியவந்தது. செயல்திறன் மட்டுமின்றி பக்க விளைவுகள் இன்றி பாதுகாப்பானதாகவும் இது செயல்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அந்த தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கும்படி ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் மத்திய அரசிடம் விண்ணப்பித்து உள்ளது.
இந்நிலையில், ‘ஜான்சன் அண்டு ஜான்சன்’ நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசியை அவசர காலத்தில் பயன்பாட்டுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2818336