
சென்னை : ”தமிழகத்திற்கு அடுத்த மாதத்தில் இருந்து கூடுதல் தடுப்பூசி ஒதுக்குவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்” என தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
பின் அவர் அளித்த பேட்டி:தமிழகத்திற்கு இதுவரை 1.78 கோடி தடுப்பூசிகள் வந்துள்ளன. இதில் 1.76 கோடி தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு உள்ளன.மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை சந்தித்து ஒரு கோடி தடுப்பூசி வழங்க கோரினோம். ஜூலைக்கு பின் கூடுதலாக தடுப்பூசிகள் ஒதுக்குவதாக தெரிவித்துள்ளார்.ஜனவரி முதல் 2000க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லுாரியில் 150 மாணவர்களை சேர்த்துக் கொள்ள மத்திய அரசு அறிவித்தது.இது தொடர்பாக மத்திய அரசு அளித்த யோசனையை ஏற்கவில்லை.

அண்டை மாவட்ட அரசு மருத்துவ கல்லுாரிகளில் மாணவர்களை பிரித்து சேர்த்துக் கொள்ள அனுமதி கேட்டுள்ளோம்.எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை உடனே துவக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம். கோவை மாவட்டத்திலும் ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை கேட்டுள்ளோம். இவ்வாறு சுப்பிரமணியன் கூறினார்.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2804283