
புதுடில்லி: மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில் தற்போது 3 கோடி டோஸ் தடுப்பூசிகள் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: நாடு முழுவதும் ஜூன் 21ம் தேதி முதல் 18 வயதுடையோருக்கு இலவசமாக தடுப்பூசி போடும் திருத்தப்பட்ட கொள்கையை மத்திய அரசு அமல்படுத்தியது. அதன்படி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு சார்பில் இலவசமாக இதுவரை மொத்தம் 49,49,89,550 டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

மேற்கொண்டு 8,04,220 தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன. இதில் வீணானவை உள்பட மொத்தம் 46,70,26,662 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. தற்போது, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளின் கையிருப்பில் 3 கோடிக்கும் மேலான தடுப்பூசிகள் (3,00,58,190) இன்னும் பயன்படுத்தப்படாமல் உள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் நாடு முழுவதும் 60,15,842 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2814257