
சென்னை–தமிழகத்தில் முதியவர்களுக்கு, முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்துவதற்கு, ஞாயிறுதோறும் சிறப்பு முகாம்கள் நடத்த, பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம் உத்தரவிட்டுள்ளார்.
அவரது சுற்றறிக்கை:தமிழகத்தில், 60 வயதுக்கு மேற்பட்டோர், 86 லட்சத்து 28 ஆயிரத்து 324 பேர் உள்ளனர். இவர்களில், 28 லட்சத்து 46 ஆயிரத்து 936 பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுள்ளனர். இதில், 11 லட்சத்து 54 ஆயிரத்து 77 பேர் மட்டுமே, இரண்டாம் தவணை தடுப்பூசியை செலுத்தி கொண்டுள்ளனர்.

அதன்படி, 33 சதவீதம் பேர் முதல், ‘டோஸ்’ தடுப்பூசியும், 13 சதவீதம் பேர், இரண்டாம் தவணை தடுப்பூசியும் போட்டுள்ளனர். ஆனால், 57 லட்சத்து 81 ஆயிரத்து 388 முதியவர்கள் தடுப்பூசி போடவில்லை.எனவே, முதியவர்கள் தடுப்பூசி போட ஏதுவாக, இன்று முதல், ஒவ்வொரு ஞாயிற்று கிழமைகளிலும், சிறப்பு முகாம்கள் அமைத்து, தடுப்பூசி போட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2818930