
சென்னை: கடந்த 2, 3 நாட்களாக கொரோனா குறித்து வெளிவரும் அரசின் அறிக்கையினைப் பார்க்கும்போது, 3வது அலை தவிர்க்க முடியாததாகி விடுமோ என்ற சூழ்நிலை எழுந்துள்ளது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்ததையடுத்து, வணிக வளாகங்களிலும், வழிபாட்டுத் தலங்களிலும், சுற்றுலாத் தலங்களிலும் கூடிய கூட்டத்தைச் சுட்டிக்காட்டி, இது மூன்றாவது அலைக்கு வழிவகுத்து விடுமோ என்ற அச்சத்தினை நான் ஜூலை 12ல் அறிக்கை வாயிலாக வெளிப்படுத்தியிருந்தேன். தற்போது, இரண்டு, மூன்று நாட்களாக கொரோனா குறித்து வெளிவரும் அரசின் அறிக்கையினைப் பார்க்கும்போது, 3வது அலை தவிர்க்க முடியாததாகி விடுமோ என்ற சூழ்நிலை எழுந்துள்ளது.
தமிழகத்தில் கிட்டத்தட்ட 20 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து இருந்தாலும், சென்னை, கோவை, ஈரோடு, திருச்சி, நாமக்கல், தஞ்சாவூர், திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில்தான் கணிசமான அளவுக்கு தொற்று அதிகரித்துள்ளது. இதற்குக் காரணம் அரசு விதிக்கின்ற கட்டுப்பாடுகள் சரியாக நடைமுறைப்படுத்தப்படாததுதான். கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருவதை முதல்வர் நன்கு அறிவார். சென்னையில் 9 இடங்களில் கடைகள் செயல்படத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. சில வழிபாட்டுத் தலங்களில் தரிசனத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது உண்மையிலேயே வரவேற்கத்தக்கது.

இருப்பினும், தடை விதிக்கப்படாத பகுதிகளில் கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படுகிறதா, அனைவரும் முகக் கவசம் அணிந்திருக்கிறார்களா, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் அளவுக்குதான் கடைகளுக்குள் மக்கள் கூட்டம் இருக்கிறதா, இதே கட்டுப்பாடுகள் வழிபாட்டுத் தலங்களிலும், சுற்றுலாத் தலங்களிலும் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதையும் கண்காணித்து நடைமுறைப்படுத்துவதில் சுணக்கம் நிலவுவதாகத் தெரிகிறது. எனவே, முதல்வர் இதில் தனிக் கவனம் செலுத்தி, கட்டுப்பாட்டு விதிகள் கடைப்பிடிக்கப்படுவதை 100 சதவீதம் உறுதி செய்து, 3வது அலையில் இருந்து தமிழக மக்களைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2814219