
கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல்நல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions’ பகுதி.
என் வயது 55. எனக்கு டைக்ளோபினாக்( Diclofenac ) மருந்து அலர்ஜி உள்ளது. அதை எடுத்துக்கொண்டதால் ஒருமுறை மிகவும் ஆபத்தான நிலைக்குச் சென்று மீண்டிருக்கிறேன். நான் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?
– ஃபரூக் (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஆஸ்துமா, அலர்ஜி சிகிச்சை சிறப்பு மருத்துவர் ஸ்ரீதரன்.
“டைக்ளோபினாக் என்பது வலிநிவாரண மருந்து. அது Non-Steroidal Anti-Inflammatory Drugs (NSAIDs) எனும் மருந்துக் குடும்பத்தைச் சேர்ந்தது. ஃபர்ஸ்ட் கஸின், செகண்டு கஸின் என நாம் உறவுமுறைகள் சொல்வது போல இந்த மருந்துக் குடும்பத்திலும் சின்னச் சின்ன மாற்றங்களோடு பலவித வலி நிவாரண மருந்துகள் உள்ளன.
இவற்றில் எந்த மருந்தை உட்கொண்டாலும் உங்களுக்கு அலர்ஜி ஏற்படும் வாய்ப்புகள் மிக அதிகம். அதாவது டைக்ளோபினாக் அலர்ஜி உள்ளவர்களுக்கு அதே குடும்பத்தைச் சேர்ந்த அசிக்ளோபினாக்கும் அலர்ஜியை ஏற்படுத்தும். அதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது NSAID குடும்பத்தைச் சேர்ந்த எந்த மருந்தையும் நீங்கள் எடுத்துக்கொள்ளக்கூடாது.
மிக ஆபத்தான ஒவ்வாமையை, பக்க விளைவுகளைக் கொடுக்கக்கூடிய மருந்து இது. இந்த மருந்து எடுத்துக்கொண்டு ஒவ்வாமை ஏற்பட்டு, உயிரிழந்தவர்கள் பலர். எனவே இந்த மருந்து அலர்ஜி உள்ளவர்கள் மிக மிக கவனத்துடன் இருக்க வேண்டும். ஆனால் இந்த மருந்துக்கும் கொரோனா தடுப்பூசிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு உங்களுக்கு காய்ச்சலோ, உடல்வலியோ ஏற்பட்டு அதற்காக ஏதேனும் மருந்து எடுக்க வேண்டுமென்றால் அப்போது உங்களுக்கு ஏற்கெனவே அலர்ஜியை ஏற்படுத்திய NSAID குடும்ப மருந்துகளை எடுக்கக்கூடாது. அலர்ஜி இல்லாதவர்கள்கூட கொரோனா தடுப்பூசியால் ஏற்படும் வலி, காய்ச்சல் போன்றவற்றுக்கு வெறும் பாராசிட்டமால் 650 மி.கி (உடல் எடையைப் பொறுத்து) எடுத்துக் கொள்ளலாம். தடுப்பூசி தொடர்பான தேவையற்ற குழப்பங்களைத் தவிர்க்கவும்.

ஏதோ மருந்து அலர்ஜி இருப்பவர்கள்கூட அதை கொரோனா தடுப்பூசியோடு தொடர்புபடுத்தி, `எனக்கு மருந்து அலர்ஜி இருக்கிறது, நான் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளக்கூடாது’ என விவாதிப்பதைப் பார்க்கிறேன். நாள்பட்ட நோய்க்கான சிகிச்சையில் இருப்பவர்கள்கூட கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும்போது அந்த மருந்துகள் எதையும் நிறுத்தத் தேவையே இல்லை. வழக்கம்போல தொடர்ந்து எடுத்துக்கொள்ளலாம்.
செவிலியர்களோ, வேறு யாருமோ தடுப்பூசி போட்டுக்கொள்ளும்போது வேறு மருந்துகள் எடுக்கக்கூடாது என்று சொன்னால் அதை நம்ப வேண்டாம். அது தவறான தகவல். சமீபத்தில் என்னைச் சந்திக்க வந்தார் 40 வயது நபர். அவரைப் பரிசோதித்தபோது ரத்த அழுத்தம் மிக அதிகமாக இருந்தது.
`இந்த வயதில் இவ்வளவு ரத்த அழுத்தம் இருக்கிறதே…. உங்களுக்குத் தெரியாதா’ என்று கேட்டேன். அதற்கு அவர், `எனக்கு ரத்த அழுத்தம் அதிகமிருப்பது தெரியும். பத்து நாள்களுக்கு முன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டேன். அப்போது தடுப்பூசி போட்ட நர்ஸ், `நீங்க ஒரு வாரத்துக்கு எந்த மருந்து, மாத்திரைகளையும் எடுத்துக்கக்கூடாது’ எனச் சொன்னார். அதனால் நிறுத்திவிட்டேன்’ என்றார்.

இது எவ்வளவு ஆபத்தானது என்பதை அவர் அறிந்திருக்கவில்லை. தடுப்பூசிக்காக இப்படி எந்த மருந்தையும் நிறுத்தக்கூடாது. ரத்த அழுத்தம் இன்னும் சிறிது அதிகரித்திருந்தாலும் அவருக்கு மூளையில் ரத்தக் கசிவு ஏற்படும் அபாயம்கூட நிகழ்ந்திருக்கலாம். எனவே நீங்கள் எந்தப் பிரச்னைக்கு சிகிச்சையில் இருந்தாலும் கோவிட் தடுப்பூசிக்காக அதற்கான மருந்துகளை நிறுத்தவே கூடாது.”
கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions’ பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!
Source: https://www.vikatan.com/health/healthy/should-i-stop-my-comorbid-medicines-for-covid-vaccines