
கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல்நல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions’ பகுதி.
என் கணவர் மே மாதம், துபாயில் ஃபைஸர் தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக்கொண்டார். அவசர காரணங்களுக்காக அவர் இந்தியா வந்துவிட்டார். விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் அவரால் மறுபடி துபாய் திரும்ப முடியவில்லை. இனி விமானப் போக்குவரத்து சகஜமான பிறகுதான் அவர் அங்கே செல்ல முடியும் என்ற நிலையில், ஃபைஸர் தடுப்பூசியின் இரண்டாவது டோஸை எத்தனை நாள்களுக்குத் தள்ளிப் போடலாம்? அவர் துபாய் செல்வது மேலும் தாமதமானால், வேறு தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போட்டுக் கொள்ளலாமா?
– ரேகா ராஜேஷ் (விகடன் இணையத்திலிருந்து)

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் அப்துல் கஃபூர்.
“ஃபைஸர் தடுப்பூசியின் ட்ரையலானது இரண்டு டோஸ்களுக்கும் இடையே இருவார இடைவெளியை அனுமதித்துச் செய்யப்பட்டது. எனவே இரண்டாவது டோஸ் தடுப்பூசிக்கான கால இடைவெளியை நாம் அதிகபட்சமாக 3 வாரங்களுக்கு மேல் நீட்டிக்கக்கூடாது.
ஆனால் நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல தவிர்க்க முடியாத காரணங்களுக்காக இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடுவது தள்ளிப் போனால், அடுத்த 3 மாதங்களுக்குள் அதைப் போட்டுக் கொள்வது சிறந்தது.
முதல் டோஸ் போட்டுக்கொண்ட அதே தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்வதைத்தான் மருத்துவர்கள் அறிவுறுத்துகிறோம்.

அப்படி அதே தடுப்பூசி கிடைக்காத பட்சத்தில் உங்களுக்கு அருகிலுள்ள தடுப்பூசி மைய அதிகாரிகளைத் தொடர்புகொண்டு மாற்று வழிகளைக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.”
கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions’ பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றை கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!