
“கையில் ஹாக்கி மட்டையை வைத்துக்கொண்டுதான் ஒடிசாவில் குழந்தைகள் நடக்கவே கற்றுக் கொள்வார்கள்” – இந்திய ஹாக்கி அணி பற்றிய பேச்சுகள் எழும்போது ஒடிசாவின் பெயரும், அந்த மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கின் பெயரும் சேர்ந்து ஒலிப்பது ஏன்?பிரீமியம் ஸ்டோரி
கிரிக்கெட் பற்றிய பேச்சுகளே அதிகமிருக்கும் இந்தியாவில், கடந்த சில நாள்களாக ஹாக்கி பற்றியும் பேசப்பட்டு வருகிறது. ஒலிம்பிக்ஸில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி வெண்கலம் வென்றதாலும், பெண்கள் அணி போராடி வெண்கலப் பதக்கத்தைக் கைவிட்டதாலும் இந்தியா முழுவதும் ஹாக்கி பற்றிய பேச்சுகளே நிறைந்திருக்கின்றன.
ஆகஸ்ட் 3-ம் தேதி பரபரப்பான ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய மகளிர் ஹாக்கி அணி. அப்போது அவர்களைப் பாராட்டி Standing Ovation கொடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டார் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக். நேற்று இந்திய ஆண்கள் ஹாக்கி அணி வெண்கலம் வென்றதும், அவர்களை வீடியோ காலில் அழைத்துப் பேசினார். இந்திய ஹாக்கி அணியினரும் ஒடிசா முதல்வர் நவீனுக்கு நன்றிகளைச் சொல்லி வருகின்றனர். இப்படி ஹாக்கி பற்றிய செய்திகள் வரும்போதெல்லாம் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் பற்றியும் பேசப்படுகிறது.

ஹாக்கிக்கும் நவீனுக்கும் என்ன சம்பந்தம்?
நவீன் பட்நாயக்குக்கு ஹாக்கி மீதிருக்கும் காதலைத் தெரிந்துகொள்ள 60 ஆண்டுகள் பின்னோக்கிச் செல்ல வேண்டியிருக்கும். 21 ஆண்டுகளாக ஒடிசாவை ஆட்சி செய்யும் நவீன், பள்ளிப் பருவத்தில் ஹாக்கி டீமின் கோல் கீப்பராக இருந்தவர். ஹாக்கிமீது அளவு கடந்த பிரியம் வைத்திருந்தவர்.
2018-ம் ஆண்டிலிருந்து இந்திய ஹாக்கி அணியைத் தத்தெடுத்துக் கொண்டது ஒடிசா அரசு என்றே சொல்லலாம். ஆம்! ஹாக்கிமீதான நவீன் பட்நாயக்கின் காதல் இதற்கு வித்திட்டது. 2018-ம் ஆண்டு இந்திய ஹாக்கி அணிக்கு ஸ்பான்சர் செய்துகொண்டிருந்த சஹாரா நிறுவனம், தனது ஸ்பான்சர்ஷிப்பை நிறுத்திக் கொள்வதாக அறிவித்தது. அந்த சமயத்தில் தாமாக முன்வந்து, `தேசிய ஹாக்கி அணிக்கான மொத்த செலவுகளையும் ஒடிசா அரசு ஏற்றுக் கொள்ளும்’ என அறிவித்ததோடு, ஒப்பந்தம் ஒன்றையும் கையெழுத்திட்டார் நவீன். அந்த ஒப்பந்தத்தின்படி, ஹாக்கி விளையாட்டுக்கான உள்கட்டமைப்புகள், மைதானங்கள் உள்ளிட்ட தேவைகளுக்காக ஐந்து ஆண்டுகளுக்கு 120 கோடி ரூபாயை ஒதுக்கியது ஒடிசா அரசு.
இந்திய ஆண்கள், மகளிர் ஹாக்கி அணிகள் என இரு அணிகளுக்குமே கடந்து மூன்று ஆண்டுகளாக ஸ்பான்சர் செய்து வருகிறது நவீன் பட்நாயக் அரசு. ஜூனியர் அணிகளுக்கும் ஒடிசா அரசுதான் ஸ்பான்சர்.
முதல் முறை!ஒரு தேசிய அணிக்கு மாநில அரசு ஸ்பான்சர் செய்வது இதுவே முதல் முறை.

ஒப்பந்தப்படி அறிவிக்கப்பட்ட 120 கோடி ரூபாயைத் தவிர, விளையாட்டுத் துறைக்காக ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் பட்ஜெட் தொகையிலிருந்து ஹாக்கி விளையாட்டுக்காகச் செலவு செய்கிறது ஒடிசா. ஹாக்கி வீரர்களுக்கான பயிற்சி, தங்குமிடம், கல்வி உள்ளிட்டவைக்கான செலவுகளுக்காக விளையாட்டு பட்ஜெட்டிலிருந்து ஒரு பகுதி எடுத்துக்கொள்ளப்படுகிறது. கடந்த ஆண்டு 265 கோடி ரூபாயாக இருந்த விளையாட்டுத் துறை பட்ஜெட்டை, இந்த ஆண்டு 370 கோடி ரூபாயாக உயர்த்தியிருக்கிறது ஒடிசா அரசு.
ஹாக்கி வீரர்களை ஒலிம்பிக் போட்டிகளுக்கு தயார்ப்படுத்துவதற்காக பட்ஜெட்டில் மிகப் பெரிய தொகையை ஒதுக்கியிருக்கிறது நவீன் பட்நாயக் அரசு. அதற்குப் பலன் தரும் வகையில், ஒலிம்பிக்ஸில் 41 ஆண்டுகளுக்குப் பின்னர் பதக்கம் வென்றிருக்கிறது இந்திய ஆண்கள் அணி!

2018-ம் ஆண்டு, ஒடிசாவில் புதிதாகக் கட்டப்பட்ட கலிங்கா மைதானத்தில் ஹாக்கி உலகக் கோப்பையை நடத்தியது ஒடிசா அரசு. அப்போது நவீன் பட்நாயக்கிடம், `ஹாக்கி உலகக் கோப்பையை ஒரு மாநில அரசு பொறுப்பேற்று நடத்தலாமா?’ என்று கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர்,
நாட்டுக்கும், விளையாட்டுக்கும் சங்கடம் ஏற்படாமலிருக்க, யாராவது ஒருவர் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்தானே!
நவீன் பட்நாயக், ஒடிசா முதல்வர்
ஒடிசாவும் ஹாக்கியும்!
ஹாக்கி விளையாட்டை அதிகம் நேசிக்கும் மாநிலமாக இருக்கிறது ஒடிசா. அங்கு ஹாக்கி விளையாட்டைத் திருவிழா போலக் கொண்டாடுகிறார்கள். ஹாக்கி மட்டையை விலை கொடுத்து வாங்க முடியாதவர்கள் மூங்கில் குச்சிகள், மரக்கிளைகள் உள்ளிட்டவற்றை உடைத்து, அதன் கீழ்ப் பகுதியைச் சற்று வளைத்து அதை வைத்து ஹாக்கி விளையாடுவார்களாம்.
“கையில் ஹாக்கி மட்டையை வைத்துக்கொண்டுதான் ஒடிசாவில் குழந்தைகள் நடக்கவே கற்றுக் கொள்வார்கள்” என்ற பொன்மொழி அங்கு பிரபலமானது!
இந்திய மகளிர் ஹாக்கி அணியின் துணைக் கேப்டனும், ஆண்கள் ஹாக்கி அணியின் துணைக் கேப்டனும் ஒடிசாவைச் சேர்ந்தவர்கள்தான். திலீப் டிர்கி, இக்னேஸ் டிர்கி, லாசரஸ் பார்லா, சுனிதா லக்ரா உள்ளிட்ட சிறந்த வீரர்களைச் சொந்த மாநிலத்திலிருந்து வளர்த்தெடுத்திருக்கிறது ஒடிசா அரசு. “வரும் காலங்களில் இன்னும் நிறைய ஹாக்கி வீரர்களை, ஒடிசா மட்டுமன்றி மற்ற மாநிலங்களிலிருந்தும் உருவாக்கத் தயாராக இருக்கிறது அரசு” என்கிறார்கள் ஒடிசா மாநில விளையாட்டுத் துறை அதிகாரிகள்.
தற்போது ஒடிசாவின் ரூர்கேலா (Rourkela) பகுதியில் 110 கோடி ரூபாய் செலவில் ஹாக்கி மைதானம் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. 2023-ல் மீண்டும் ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பையை நடத்துவதற்காக இந்த மைதானத்தைத் தயார் செய்து கொண்டிருக்கிறது ஒடிசா அரசு.
ஹாக்கிமீது ஈடுபாடு காட்டி ஒடிசா அரசு எடுத்து வரும் முன்னெடுப்புகள், 2024 ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய அணி தங்கம் வெல்லும் என்கிற நம்பிக்கையை நமக்குத் தருகிறது!