
ஐபிஎல் 2022 சீசனுக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள அணிக்கு இந்திய அணியின் இளம் வீரர்கள் இருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் 2022 சீசனில் 10 அணிகள் பங்கேற்கின்றன. இதில் 8 அணிகள் தாங்கள் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளன. அதேநேரம் புதிதாக அகமதாபாத், லக்னோ என இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த அணிகளில் யார் யார் இடம்பெறப் போகிறார்கள் என்ற தகவல் தான் தற்போதைய ஹாட் டாப்பிக். லக்னோ அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் நியமிக்கப்படலாம் என்ற உறுதியான தகவல்கள் இன்று வெளியாகியுள்ளன.
பிப்ரவரி 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் பெங்களூரில் நடைபெறும் மெகா ஏலத்திற்கு முன்னதாக லக்னோ அணி நிர்வாகம் கேஎல் ராகுலை தேர்வு செய்துள்ளது என்று ஐபிஎல் நிர்வாகத்தைச் சேர்ந்த ஒருவர் தனியார் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். மேலும் கேஎல் ராகுல் உடன் ஆஸ்திரேலிய அணியைச் சேர்ந்த ஆல் ரவுண்டர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் இந்தியாவின் லெக் ஸ்பின்னர் ரவி பிஷ்னோய் ஆகியோரும் லக்னோ அணியால் தக்க வைக்கப்படலாம் என்றும் அவர் அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

லக்னோ அணியைப் போல், அகமதாபாத் அணியும் இந்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, இளம் தொடக்க வீரர் சுப்மன் கில், ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் ஆகியோரை ஒப்பந்தம் செய்துள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக மும்பை இந்தியன்ஸ் வீரர் இஷான் கிஷனை அகமதாபாத் அணி ஒப்பந்தம் செய்ய விருப்பம் தெரிவித்ததாக தகவல் வெளியான நிலையில் தற்போது அவருக்குப் பதிலாக சுப்மன் கில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அகமதாபாத் அணி நிர்வாகம் தங்களின் தலைமைப் பயிற்சியாளராக கேரி கிரிஸ்டனும், பந்துவீச்சு பயிற்சியாளராக ஆஷிஸ் நெஹராவையும் தேர்வு செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த தகவல்கள் அந்தந்த அணி நிர்வாகங்கள் சார்பில் உறுதிப்படுத்தப்படவில்லை. பிப்ரவரி 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் பெங்களூரில் ஐபிஎல் ஏலம் நடைபெறவுள்ளதை அடுத்து விரைவில் இந்த தகவல்கள் உறுதியாகலாம்.