
ஜப்பானில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியின் ஆடவருக்கான ஹாக்கி போட்டியில், பிரித்தானியாவை வீழ்த்தி, இந்தியா அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இன்றைய நாளை பொறுத்தவரை இந்தியாவுக்கு ஒரு நல்ல நாளாகவே அமைந்துள்ளது என்று கூறலாம், ஏனெனில் பேட்மிட்டனில் இந்தியா சார்பாக விளையாடிய பி.வி.சிந்து வெண்கலப்பதக்கம் வென்று பெருமை சேர்த்தார்.
இதைத் தொடர்ந்து ஆடவருக்கான ஹாக்கி போட்டியில், இந்திய அணி, காலிறுதிப் போட்டியில் கிரேட் பிரிட்டன் அணியை 3-1 என்று வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக்கின் ஆடவருக்கான ஹாக்கி போட்டியின் காலிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றது. அதன் படி இந்தியா, கிரேட் பிரிட்டன் அணியை எதிர் கொண்டது.

இதில், ஆட்டத்தின் முதல் சுற்றிலே தில்பிரீத் சிங் கோல் அடித்து, இந்திய அணியை முன்னிலைப் படுத்தினார். அதைத் தொடர்ந்து, இரண்டாவது சுற்றுப்போட்டியிலும் இந்திய அணியின் ஆதிக்கமே நிறைந்திருந்தது.
நட்சத்திர வீரர் குஜராந்த் சிங் இந்தியாவிற்கு இரண்டாவது கோலை அடித்தார். இதன் மூலம் இந்திய அணி ஆட்டத்தின் முதல் பாதியில் 2-0 என முன்னிலை வகித்தது.
அதன் பின் ஆட்டத்தின் மூன்றாவது சுற்றில், பிரித்தானியா அணிக்கு பெனால்டி கார்னர் மூலம் அந்த அணியின் சாம் வார்ட் கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1 – 2 என்று மாறியது.
இதைத் தொடர்ந்து இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்த, ஹர்டிக் சிங் மீண்டும் ஒரு கோல் அடித்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார். இறுதியில் இந்திய அணி 3-1 என்று வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
Source: https://news.lankasri.com/article/great-brittain-defeat-by-india-hockey-in-olympic-1627836896