
டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள ஒலிம்பிக் கிராமத்தில் தங்கியிருந்த மேலும் 3 வீரர்கள் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் 23-ம் தேதி ஒலிம்பி விளையாட்டுப் போட்டிகள் கோலாகலமாக துவங்க உள்ளது. இதற்காக பல்வேறு நாடுகளை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் டோக்கியோவில் உள்ள ஒலிம்பிக் கிராமத்திற்கு சென்று தங்கியுள்ளனர். அங்கு கோவிட் பரவல் அதிகரித்துள்ளதால், பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருந்தது. அதிகபாதுகாப்பு அம்சங்கள், தீவிர பரிசோதனைக்குப்பின் அனுமதிக்கப்படக்கூடிய ஒலிம்பிக் கிராமத்துக்குள் தங்கி இருந்த 3 தடகள வீரர்களுக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளது.

மூன்று வீரர்களும் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்த அடையாளத்தை ஒலிம்பிக் நிர்வாகக் குழுவினர் வெளியிடவில்லை. தீவிர சோதனைக்கு பிறகு ஒலிம்பிக் கிராமத்திற்குள் வீரர்கள் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அங்குள்ள வீரர்களுக்கு கோவிட் தொற்று ஏற்பட்டது இதுவே முதன்முறை. இதனால், மற்ற வீரர்களும் பீதியடைந்துள்ளனர்.
இதுவரை ஒலிம்பிக் போட்டிக்கு வந்தவர்களில் 10 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் 5 பேர் வீரர்களுடன் வந்தவர்கள், ஒருவர் ஒப்பந்ததாரர், ஒருவர் பத்திரிகையாளர் என 10 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று போட்டிநிர்வாகக் குழுவினர் தெரிவித்துள்ளனர். .
இதற்கிடையே இந்தியாவிலிருந்து ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளில் ஒரு குழுவினர் நேற்று (ஜூலை 17) டோக்கியோ புறப்பட்டுச் சென்று இன்று காலை அங்கு சென்றடைந்தனர்.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2804669