
டோக்கியோ,
கடந்த ஆண்டு நடைபெறுவதாக இருந்த ஒலிம்பிக்ஸ் போட்டிகள், கொரோனா பரவல் காரணமாகக் ஒத்தி போடப்பட்டன. இறுதியாக இன்னும் சில தினங்களில் ஜப்பானின் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கவிருக்கின்றன.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 119 வீரர், வீராங்கனைகள் உள்பட மொத்தம் 228 பேர் கொண்ட இந்திய அணி கலந்து கொள்கிறது. இதில் 67 வீரர்கள், 52 வீராங்கனைகள் அடங்குவார்கள். 85 பந்தயங்களில் நமது அணி பங்கேற்கிறது. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் அதிக எண்ணிக்கை கொண்ட இந்திய அணி இது தான்.
இந்நிலையில் இந்திய அணியின் துப்பாக்கிச் சுடுதல் குழு இன்று (17-ந் தேதி) காலை டோக்கியோவில் தரையிறங்கியது. இந்த குழுவில் வீரர்கள், அதிகாரிகள் என்று மொத்தம் 90 பேர் இடம் பெற்றிருந்தனர். அவர்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அதன் முடிவுகளுக்காக காத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக விமான நிலையத்தில் கடுமையான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கொரோனா இல்லை என்ற சான்றிதழுடன் சென்றாலும், வீரர்கள் மற்றும் ஒலிம்பிக் அதிகாரிகள் டோக்கியோ விமான நிலையத்திலும் கொரோனா பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும். பரிசோதனை முடிவுகள் வெளியாகும் வரை, விமானநிலையத்திலேயே இருக்கவேண்டும். முடிவுகள் பாதகமாக வந்தால், அவர்கள் நகருக்குள் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.