
இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு செய்து உள்ளது.
லண்டன்,
விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடி வருகிறது.
2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட இந்த தொடரில் நாட்டிங்காமில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இதில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 183 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனாலும், 2-வது இன்னிங்சில் 303 ரன்கள் குவித்து முதல் இன்னிங்ஸ் பின்னடைவை சமாளித்தது. அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் முறையே 64, 109 ரன்கள் எடுத்து அணியின் முதுகெலும்பாக விளங்கினார்.
முதல் இன்னிங்சில் 278 ரன்களை சேர்த்து 95 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி 209 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடி 4-வது நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 52 ரன்கள் எடுத்து நல்ல நிலையில் இருந்தது. இறுதி நாளில் இந்தியா மேலும் 157 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்று இருந்த நிலையில் மழை காரணமாக கடைசி நாள் ஆட்டம் முழுமையாக பாதிக்கப்பட்டதால் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பறிபோனது. இரு அணியிலும் வேகப்பந்து வீச்சாளர்கள் மிரட்டும் வகையில் பந்து வீசினார்கள். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சை பொறுத்தமட்டில் குறிப்பாக ஜஸ்பிரித் பும்ரா இரு இன்னிங்சிலும் சேர்த்து 9 விக்கெட்டுகள் வீழ்த்தி மீண்டும் விசுவரூபம் எடுத்தார்.
இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்து உள்ளது.
இந்த போட்டிக்கான இரு அணிகளின் வீரர்கள் விவரம் வருமாறு:-
இந்தியா: ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், புஜாரா, விராட்கோலி (கேப்டன்), ரஹானே, ரிஷாப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.
இங்கிலாந்து: ரோரி பர்ன்ஸ், டாம் சிப்லி, ஹசீப் ஹமீது, ஜோ ரூட் (கேப்டன்), பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லர், மொயீன் அலி, சாம் கர்ரன், ஆலி ராபின்சன், மார்க் வுட், கிரேக் ஒவெர்டன் அல்லது சாகிப் மக்மூத்.
இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென் 3,4 ஆகிய சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்து வருகின்றன.