
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்து வீச்சாளர்களில் ஒருவராக வலம் வருபவர் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின். ஐசிசி-யின் சிறந்த டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் பட்டியலில் 2ம் இடம் பிடித்துள்ள இவர், இந்தாண்டு நடந்த டெஸ்ட் தொடர்களில் தனது சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தியுள்ளார். சமீபத்தில் இங்கிலாந்து மண்ணில் நியூசிலாந்து அணிக்கெதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் மிக துல்லியமாக பந்துகளை வீசி இருந்தார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவியிருப்பது ரசிகர்களுக்கு வருத்தத்தை அளித்தாலும், அதே இங்கிலாந்து மண்ணில் தற்போது இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதவிருக்கும் போட்டிகளை காணும் ஆவலில் உள்ளனர். முதலில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மோதவுள்ள இந்திய அணியில் நிச்சம் அஷ்வின் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த போட்டிகள் துவங்க சில நாட்கள் உள்ள நிலையில், இந்திய வீரர்கள் ஓய்வில் உள்ளனர். ஆனால் அஸ்வினோ தன்னை ஆக்டிவாக வைத்திருக்க புதிய வழிகளை கண்டுபிடித்து செயல்பட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். கடந்த ஜூலை 11ம் தேதி துவங்கிய இந்த போட்டியில் சர்ரே அணி சார்பாக விளையாடுகிறார் அஸ்வின்.
இந்நிலையில், அஸ்வின் இந்த போட்டியில் வீசிய பந்தை சமாளிக்க முடியாமல் க்ளீன் போல்ட் ஆகி வெளியேறிய வீரர் ஒருவரின் வீடியோ சமூக வலைதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. 21 வயதான அந்த இளம் வீரர் அஸ்வின் வீசிய பந்து வெளியே போகிறது என்று நினைத்து பந்தினை அடிக்காமல் விடுகிறார். பந்து கண்ணிமைக்கும் நொடியில் சுழன்று அவருக்கு பின்னால் இருக்கும் போல்ட்டை பதம் பார்க்கிறது. இதை நம்ப முடியதாக அந்த வீரர். சிறிது கலக்கத்துடன் பெவிலியன் நோக்கி நடையை கட்டுகிறார். சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோ தற்போது இணைய பக்கங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
அஷ்வின் சாதனை
இந்த போட்டியில் அஷ்வின் தனது முதல் ஓவரை வீசியதன் மூலம் இங்கிலாந்து மண்ணில் 11 ஆண்டு கழித்து சாதனை ஒன்றை படைத்துள்ளார். அது என்ன சாதனை என்றால், இதற்கு முன்னர் இங்கிலாந்து மண்ணில் சுழற்பந்து வீச்சாளர் முதல் ஓவரை வீசியது 2010 ஆம் ஆண்டுதான். அதன்பிறகு தற்போது 11 ஆண்டுகள் கழித்து அஷ்வின் முதல் ஓவரை வீசியுள்ளார்.