
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக 10 ஆயிரம் ரன்களை கடந்து ஷிகர் தவான் சாதனை படைத்துள்ளார்.
கொழும்பு,
ஒரு நாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் விளையாடுவதற்காக ஷிகர் தவான் தலைமையில், ராகுல் டிராவிட்டின் பயிற்சியின் கீழ் உருவாக்கப்பட்ட 2ம் தர இந்திய அணி இலங்கைக்கு சென்றுள்ளது.
இதில், இலங்கைக்கு எதிராக நேற்று நடந்த முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில், 263 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி இந்திய கிரிக்கெட் அணி சேசிங் செய்தது.
இதில், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக 10 ஆயிரம் ரன்களை கடந்து ஷிகர் தவான் சாதனை படைத்துள்ளார்.
இந்திய தொடக்க ஆட்டக்காரர்களான விரேந்தர் சேவாக், சச்சின் தெண்டுல்கர், சுனில் கவாஸ்கர் மற்றும் ரோகித் சர்மா ஆகிய 4 பேர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்துள்ளனர்.
இதேபோன்று, சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் 6 ஆயிரம் ரன்களை கடந்த இந்திய அணி வீரர்களில் சச்சின் தெண்டுல்கர், விராட் கோலி, சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட், தோனி, முகமது அசாருதீன், ரோகித் சர்மா, யுவராஜ் சிங், விரேந்தர் சேவாக் ஆகியோர் கொண்ட பட்டியலில் தவான் 10வது இடம் பிடித்துள்ளார்.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 86 ரன்கள் (95 பந்துகள் 6 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து விளையாடி அணி வெற்றி பெற பங்காற்றினார்.
இதனால் இந்திய அணி 1-0 என்ற புள்ளி கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2வது ஒரு நாள் போட்டி நாளை நடைபெற உள்ளது.