சண்டிகர்: இந்தியாவுக்கு முதலாவது கிரிக்கெட் உலக கோப்பையை வென்று தந்த அணியில் இடம்பெற்றிருந்த யாஷ்பால் சர்மா 66, மாரடைப்பு காரணமாக இன்று (ஜூலை 13) உயிரிழந்தார்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் யாஷ்பால் சர்மா, பஞ்சாப் மாநிலம் லுதியானாவில் பிறந்தார். 70, 80களில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக வலம் வந்த இவர், 1983ல் நடந்த உலக கோப்பை தொடரில் சிறப்பான பங்களிப்பால் இந்திய அணி கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அவர், தனது மனைவி, இரு மகள்கள், ஒரு மகனுடன் வசித்து வந்தார். இந்நிலையில், இன்று காலை மணியளவில் அவருக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 66.

1983ல் நடந்த உலக கோப்பை தொடரில் இரு அரைசதங்கள் அடித்தார். அந்த தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி, பலம் வாய்ந்த மேற்கு இந்திய தீவுகள் அணியை வீழ்த்தி உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தது. இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய யாஷ்பால் சர்மா, 89 ரன்கள் குவித்தார். அதேபோல், அந்த தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் 40 பந்துகளில் 40 ரன்களும், அரையிறுதியில் 115 பந்துகளில் 61 ரன்களும் எடுத்து முக்கியப் பங்களித்தார். ஓய்வுக்கு பிறகு இந்திய கிரிக்கெட் வாரியம், பஞ்சாப் மற்றும் அரியானா கிரிக்கெட் வாரியத்தில் முக்கிய பொறுப்புகளையும் வகித்தார்.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2801584