
மெல்பர்ன்: பிரபல டென்னிஸ் வீரர்நோவக் ஜோகோவிச், 2-வது முறையாக விசா ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் சட்ட ரீதியான போராட்டத்தில் தோல்வியடைந்தார். இதையடுத்து ஆஸ்திரேலியாவை விட்டு அவர் வெளியேறினார்.
கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் இன்று (17ம் தேதி) ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் தொடங்குகிறது. இந்தத் தொடரில் பங்கேற்பதற்காக உலகின் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமலேயே கடந்த 6-ம் தேதி மெல்பர்ன் சென்றார். அப்போது விமான நிலையத்தில் அவரை விசாரித்த அதிகாரிகள், போதுமான மருத்துவ ஆவணங்கள் இல்லை எனக்கூறி ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய அனுமதி மறுத்து விசாவை ரத்து செய்தனர்.
இதை எதிர்த்து ஜோகோவிச், ஃபெடரல் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் குடிவரவு அமைச்சர் அலெக்ஸ் ஹாக், பொது நலன் கருதி, கடந்த வெள்ளிக்கிழமை ஜோகோவிச்சின் விசாவை ரத்து செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து ஜோகோவிச், ஃபெடரல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கை நேற்று விசாரித்த 3 பேர் அடங்கிய நீபதிகள் அமர்வு, ஒருமனதாக ஜோகோவிச்சின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.
இதையடுத்து இந்திய நேரப்படி நேற்று மாலை 5.21 மணி அளவில் ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியேறினார் ஜோகோவிச். மெல்பர்ன் விமான நிலையத்தில் இருந்து துபாய் புறப்பட்ட விமானத்தில் ஜோகோவிச் புறப்பட்டுச் சென்றார்.
Source: https://www.hindutamil.in/news/sports/757978-novak-djokovic-leaves-australia.html