
பத்தே மாத பயிற்சியில் டோக்கியோ ஒலிம்பிக்கில் சிந்துவை தங்கம் வெல்ல வைக்கவேண்டும் என்பதுதான் சாங்கின் முன்பிருந்த சவால். சவாலைத் துணிந்து ஏற்றுக்கொண்டு சியோலில் இருந்து ஹைதராபாத்துக்கு ஃப்ளைட் ஏறிவிட்டார் 40 வயதான பார்க் டே சாங்.
‘’2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வீர்களா?’’ டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற சிந்துவிடம் கேட்கப்பட்ட முதல் கேள்வி இதுதான். 2016-ல் ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற சிந்துவிடமும் இதே கேள்விதான் கேட்கப்பட்டது. ‘’டோக்கியோ ஒலிம்பிக்கில் சில்வர் சிந்து தங்கம் வெல்வாரா?’’
இந்த கேள்வி தரும் அழுத்தமும், அச்சமும், பதற்றமும் எப்படிப்பட்டது என்பது சிந்துக்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கும்.
‘’சில்வர் சிந்து டோக்கியோவில் தங்கம் அல்ல, முதல் ரவுண்டையாவது தாண்டுவாரா?’’ என்று அதே மீடியாக்கள் கேள்வி எழுப்பும் நிலைக்கு தன் ஃபார்ம் மோசமாக மாறும் என சிந்துவே நினைத்திருக்கமாட்டார். 2016 ரியோ ஒலிம்பிக்கில் சிந்துவை வழிநடத்திய பயிற்சியாளர் கோபிசந்திடம் இருந்து சிந்து விலகியதுமே அவரது கரியர் ஆட்டம் கண்டது.
தோல்விகளின் போது தன்னோடு துணை நிற்க, தோல்விகளில் இருந்து தன்னை மீட்டெடுக்க, தன் மீதான அத்தனை விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுக்க, மீண்டும் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வைக்க சிந்துவுக்கு ஒரு நல்ல மேய்ப்பன் தேவைப்பட்டார். அந்த மேய்ப்பனை கண்டுபிடிப்பது சிந்துவுக்கு அவ்வளவு சுலபமானதாக இல்லை.

பிவி சிந்துவை மீண்டும் வெற்றியை நோக்கி அழைத்து செல்லப்போகும் பயிற்சியாளர் யார் என்கிற தேடல் தொடர்ந்துகொண்டே இருந்தது. புதிதாக விளையாட ஆரம்பிக்கும் இளைஞனுக்கு, இளைஞிக்கு பயிற்சி அளிப்பது சுலபமானது. கையில் இருக்கும் களிமண்ணை எப்படி வேண்டுமானாலும் குழைத்து, நெளித்து, வளைத்து சிறப்பம் ஆக்கலாம். ஆனால், ஏற்கெனவே உலகமே கண்டு வியந்து உடைந்த சிற்பத்தை மீண்டும் அதே பழைய சிற்பமாக்குவது அவ்வளவு சுலபமானதல்ல!
ரியோ ஒலிம்பிக்கிற்குப்பிறகு தனிப்பட்ட சில காரணங்களால் கோபிசந்த் அகாடமியில் இருந்து சிந்து வெளியேற வேண்டிய சூழல். இந்தோனேஷியாவில் இருந்து ஒரு பயிற்சியாளர் வந்தார். பல இந்திய பேட்மின்டன் வீரர்களுக்குப் பயிற்சி அளித்த முல்யோ ஹண்டோயோ (Mulyo Handoyo) தான் அவர். ஆனால், தனிப்பட்ட காரணங்களைச் சொல்லி ஒரே ஆண்டில் சிந்துவிடம் இருந்து விலகினார் முல்யோ. சிந்துவை மீண்டும் பழைய சிற்பமாக்கும் பொறுமை அவருக்கு இல்லை.
அடுத்து கொரியாவில் இருந்து கிம் ஹுன் வந்தார். இவரது பயிற்சியின் கீழ்தான் 2019-ல் உலக சாம்பியன்ஷிப்பை வென்றார் சிந்து. ஆனால், திடீரென கிம்மும் தனிப்பட்ட காரணங்களைச் சொல்லி பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகிவிட்டார். மீண்டும் சிற்பம் உடைந்தது.
2020 ஜூலையில் டோக்கியோ ஒலிம்பிக். இன்னும் 10 மாதங்களே இருக்கிறது. ஆனால், சிந்துவுக்கு சரியான பயிற்சியாளர் இல்லை. இந்த சூழலில்தான் தென் கொரியாவில் இருந்து பார்க் டே சாங் சிந்துவுக்கு பயிற்சியாளராக வருகிறார். பத்தே மாத பயிற்சியில் டோக்கியோ ஒலிம்பிக்கில் சிந்துவை தங்கம் வெல்ல வைக்கவேண்டும் என்பதுதான் அவர் முன்பிருந்த சவால். சவாலைத் துணிந்து ஏற்றுக்கொண்டு சியோலில் இருந்து ஹைதராபாத்துக்கு ஃப்ளைட் ஏறிவிட்டார் 40 வயதான பார்க் டே சாங்.

யார் இந்த பார்க் டே சாங்?!
தென் கொரியாவின் முன்னாள் பேட்மின்டன் வீரர் பார்க் டே சாங். 2002-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றவர். 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் துடிப்போடு இருந்தவரின் கனவு காலிறுதிப் போட்டியோடு முடிந்துபோனது. எல்லா முன்னாள் வீரர்களையும் போல பயிற்சியாளராக மாறினார் பார்க் டே சாங். ஆனால், எல்லா பயிற்சியாளர்களையும் போல அல்ல!
பார்க் டே சாங்கின் பயிற்சி முறைகளில் வித்தியாசம் தெரிய தென்கொரியாவே 2013-ல் தங்கள் தேசிய அணிக்கு பயிற்சியாளராக நியமித்தது. தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் அதாவது 2018 வரை தென்கொரியாவின் பயிற்சியாளராக இருந்தார் பார்க் டே சாங். ஆனால், அவரால் எந்த தென் கொரிய வீரரையும் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வைக்க முடியவில்லை. இந்த சூழலில்தான் இந்தியாவின் நம்பர் 1 வீராங்கனைக்கு பயிற்சியாளராக வேண்டும் என்கிற வாய்ப்பு கதவைத் தட்டுகிறது.
ஆனால், நம்பர் 1 சிந்து அப்போது ஃபார்மில் இல்லை. பழைய ஃபார்முக்கு வரமுடியாமல் தத்தளிக்கும் சிந்துவை மீட்டெடுத்து மீண்டும் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வைக்க வேண்டும். இதெல்லாம் அடுத்த சில மாதங்களுக்குள் நடக்க வேண்டும். பார்க் டே சாங் துணிந்து களத்தில் இறங்கினார். காரணம் அவரும் ஒலிம்பிக் மேடையில் தனக்கான பதக்கத்தை தேடிக்கொண்டிருந்தார். தான் வாங்காத ஒலிம்பிக் பதக்கத்தை தான் பயிற்சியளிக்கும் வீரர்களைக் கொண்டாவது வாங்கிவிட வேண்டும் என்பதுதான் அவர் கனவு.

பார்க் டே சாங் சிந்துவுக்கு பேட்மின்டன் பயிற்சிகள் எதுவும் புதிதாக அளிக்கவில்லை. ஏனென்றால் சிந்துவுக்குத் தெரியாத ஆட்ட நுணுக்கங்கள் எதுவும் இல்லை. அவர் பயிற்சியளித்தது சிந்துவின் மனதுக்கு மட்டும்தான். சிந்து ஆக்ரோஷமாக பயமின்றி ஆடும் வீராங்கனை. ஆனால், எதிரில் ஆடும் வீராங்கனைகள் புள்ளிகள் பெற ஆரம்பித்ததும் தன் கவனத்தை இழந்து, பதற்றமாவதை வழக்கமாக வைத்திருந்தார். சிந்துவின் அந்த பதற்றத்தையும், அழுத்தத்தையும், அச்சத்தையும் போக்குவதுதான் பார்க் டே சாங்கின் வேலையாக இருந்தது.
பார்க் டே சிந்துவின் பயிற்சியாளர் ஆனதில் இருந்து தோல்விகள் மட்டுமே தொடர்ந்தது. ஆனால், பார்க் டே சாங் பதற்றப்படவில்லை, நிதானம் இழக்கவில்லை, வேலையை பாதியில் விட்டுவிட்டு ஓடிவிடவில்லை. பொறுமை காத்தார். சிந்துவையும் பொறுமையோடும், பொறுப்போடும் வழிநடத்தினார். பார்க் பயிற்சியாளர் ஆனப்பிறகு 8 பெரிய தொடர்களில் பங்கேற்றார் சிந்து. எட்டிலுமே தோல்விகள் மட்டுமல்ல அவமானகரமான தோல்விகளே சிந்துவுக்கும், பார்க்குக்கும் பரிசாகக் கிடைத்தது. முதல் ரவுண்டிலேயே சிந்து வெளியேறிய சம்பவங்களும் நிகழ்ந்தது.
ஆனால், தோல்விகள் தொடரத் தொடர பயிற்சியாளருக்கும், வீரருக்குமான நெருக்கம் இன்னும் அதிகமானது. சிந்துவுக்கு எந்த இடத்தில் உதவ வேண்டும், எந்த இடத்தில் விலகி நிற்க வேண்டும் என்பது பார்க்குக்கு இன்னும் தெளிவாகப் புரிந்தது. அதேப்போல தன் தவறுகளை உணர்ந்து தன்னை முழுமையாக பார்க்கிடம் ஒப்படைத்தார் சிந்து. உடைந்த சிற்பம், சிற்பியை நம்பித் தன்னை ஒப்புக்கொடுத்தது.