
2012 லண்டன் ஒலிம்பிக்ஸ். புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானம். வில்வித்தை போட்டிகள் நடந்துகொண்டிருக்கின்றன. இந்திய ரசிகர்களின் நம்பிக்கை பலமடங்கு அதிகரித்திருக்கிறது. காரணம், தீபிகா குமாரி. ரீகர்வ் பிரிவில் உலகின் நம்பர் 1 வீராங்கனையாக அந்த அரங்கில் கால் பதித்தார் 18 வயது தீபிகா.
அந்த இளம் வயதில் 100 கோடி இந்தியர்களின் எதிர்பார்ப்பை சுமந்துகொண்டிருந்தவருக்கு காய்ச்சல் வேறு. போதாக்குறைக்கு அன்று லண்டனில் தொடர்ந்து காற்றடிக்க, அவரால் சிறப்பாகச் செயல்பட முடியவில்லை. தன் முதல் போட்டியிலேயே தோல்வியடைந்து வெளியேறினார்.
இன்று 9 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒலிம்பிக் களத்துக்குள் நம்பர் 1 வீராங்கனையாக நுழையப்போகிறார். ஆனால், இந்த முறை எதிர்பார்ப்புகள் ஏற்படுத்தும் நெருக்கடியோ, உடல் நிலையோ, தட்பவெட்ப நிலையோ எதுவும் அவரை, அவரின் வெற்றியைத் தடுக்கப்போவதில்லை. இந்தக் காலகட்டத்தில் அவர் கண்டிருக்கும் முன்னேற்றம், அவர் பெற்றிருக்கும் அனுபவம் அவரை வேறொரு லெவலுக்கு எடுத்துச் சென்றிருக்கிறது. அதற்குச் சான்று, சமீபத்தில் பிரான்ஸில் நடந்து முடிந்த உலகக் கோப்பை!
Source: https://sports.vikatan.com/olympics/deepika-kumari-eyes-gold-in-tokyo-olympics