
புதுடில்லி: டோக்கியோவில் நடந்து வரும் 16வது பாராலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வரும் பாராலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர்கள் அசத்தி வருகின்றனர். நேற்றும் (ஆக.,29) இன்றும் (ஆக.,30) இந்தியாவிற்கு இதுவரை 1 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என 7 பதக்கங்கள் கிடைத்துள்ளன. இன்று காலை மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனை அவனி லெகாரா தங்கம் வென்றார். ஈட்டி எறிதலில் தேவேந்திர ஜஜாரியா வெள்ளியும், சுந்தர் குர்ஜார் வெண்கலமும் வென்றனர். வட்டு எறிதலில் யோகேஷ் காதுன்யா வெள்ளி வென்றார். இவர்களுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இன்று பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தங்கம் வென்ற அவனி லெகாராவுக்கு மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்த வாழ்த்து செய்தி: சிறந்த முறையில் அவனி லெகாரா செயல்பட்டுள்ளார். துப்பாக்கிச் சுடுதலில், இயற்கையிலேயே உங்களுக்கு அமைந்த கடின உழைப்பு மற்றும் ஆர்வம் ஆகியவற்றால் இந்த வெற்றி சாத்தியப்பட்டு உள்ளது. தங்கம் வெல்ல தகுதி கொண்ட, கடின உழைப்பாளியான உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள். இந்திய விளையாட்டில் உண்மையில் இது ஒரு சிறப்பு தருணம். வருங்கால முயற்சிகளுக்கு எனது வாழ்த்துகள். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

வட்டு எறிதலில் யோகேஷ் காதுன்யா வெள்ளி வென்றது குறித்து மோடியின் வாழ்த்து: யோகேஷ் காதுனியா சிறப்பாக விளையாடியுள்ளார். அவர் வெள்ளிப்பதக்கம் வென்றது பெருமை அளிக்கிறது. அவரது இந்த சிறப்பான வெற்றி வளர்ந்துவரும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும். அவருக்கு எனது வாழ்த்துக்கள். அவரது எதிர்கால முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துகிறேன். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2833637