
புதுடில்லி: இந்தியாவின் முதல் பெண் விமானியான சர்லா துக்ரலின் 107வது பிறந்த நாளான இன்று (ஆக.-8), அவரை பெருமைப்படுத்தும் விதமாக கூகுள் இணையதளம் டூடுல் வெளியிட்டுள்ளது.
கடந்த 1914ம் ஆண்டு, ஆக.,8 ல் டில்லியில் பிறந்த சர்லா துக்ரல், பின்னர் லாகூரில் குடிபெயர்ந்தார். அவரது கணவர், விமானியாக பணிபுரிந்தார். அதனால் சர்லா துக்ரலுக்கும் விமானியாக வேண்டும்மென்ற விருப்பம் ஏற்பட்டது. அதற்காக அவர், லாகூர் விமான பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்றார். 1,000 மணி நேரம் பயிற்சி பெற்று, விமானம் இயக்குவதற்கான உரிமம் பெற்றார். பெண் ஒருவர் விமானி உரிமம் பெற்றது அப்போது அனைவராலும் ஆச்சரியமாகவும், மிகப் பெரிய சாதனையாகவும் பார்க்கப்பட்டது. பத்திரிகைகள் அவரை பாராட்டி எழுதின. அவர், தனது 21வயதில் புடவை அணிந்து, தான் பயிற்சி பெற்ற விமானத்தின் முன்பாக எடுத்த புகைப்படம், ஆகாயத்தில் பறக்க விரும்பும் பெண்களுக்கு உந்து சக்தியாக விளங்கி வருகிறது.

விமானி உரிமம் பெற்றபிறகு வணிக விமானி ஆவதற்கான முயற்சிகளை செய்தார். அப்போது 2வது உலகப்போர் துவங்கியதால், சிவில் விமானப்பயிற்சி நிறுத்தப்பட்டது. பயிற்சியை தொடர முடியாத காரணத்தினால், ஓவியம், நுண்கலை மற்றும் நகை வடிவமைப்பில் தனது கவனத்தை செலுத்தினார். இவர் 2008-ம் ஆண்டு காலமானார். அவரை கவுரவிக்கும் வகையில், கூகுள் நிறுவனம் டூடுல் வெளியிட்டுள்ளது.

Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2819005