
புதுடில்லி :எல்லைப் பகுதியில், சீன ராணுவத்தின் நடவடிக்கைகள் அனைத்தையும், நம் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து கண்காணித்து வருவதாக, இந்திய ராணுவம்
தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம் முதல், எல்லைப் பிரச்னை காரணமாக, நம் அண்டை நாடான சீனாவுடன் மோதல் போக்கு நிலவி வருகிறது. லடாக் எல்லைப் பகுதியில் இருநாட்டு ராணுவ வீரர்களும் குவிக்கப்பட்டதால் பதற்றமான சூழல் நிலவியது. இதற்கிடையே, இருதரப்பு ராணுவ அதிகாரிகள் நடத்திய பலகட்ட பேச்சு வாயிலாக, லடாக்கின் பாங்கோங் சோ ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளில் இருந்து, இருதரப்பு வீரர்களும் வாபஸ் பெறப்பட்டனர்.
![]() |
எனினும், இதர பகுதிகளில் இருந்து, வீரர்கள் திரும்பப் பெறப்படவில்லை. இதனால், எல்லையில் பதற்றம் நீடிக்கிறது. இந்நிலையில், லடாக்கில் நிலவும் சூழல் குறித்து, இந்திய ராணுவம் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த பிப்ரவரி மாதம், பாங்கோங் சோ ஏரிக்கரையில் இருந்து, இரு தரப்பு வீரர்களும் வாபஸ் பெறப்பட்டதில் இருந்து, அந்த பகுதியை மீண்டும் ஆக்கிரமிக்கும் முயற்சிகள் எதுவும் அரங்கேறவில்லை.
கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட எந்த பகுதிகளிலும், இரு தரப்பு வீரர்கள் இடையே மோதல்கள் ஏற்படவில்லை. சீனாவுடன் செய்யப்பட்ட ஒப்பந்தம் வீணாகிவிட்டதாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் தவறானவை; அடிப்படை ஆதாரங்கள் இல்லாதவை.இரு தரப்புக்கு இடையில் நிலவும் எல்லைப் பிரச்னைகளுக்கு தீர்வு காண, தொடர்ந்து பேச்சு நடந்து வருகிறது.எல்லைப் பகுதியில், சீன ராணுவத்தின் நடவடிக்கைகள் அனைத்தையும், நம் பாதுகாப்புப் படையினர், தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2802365