
அரசால் தடைசெய்யப்பட்ட கடல் அட்டை, கடல் குதிரை போன்ற அரியவகை கடல் உயிரினங்களை வெளிநாடுகளுக்குக் கடத்திய வழக்கில் இரண்டு மாதங்களுக்கு முன்பு கைதுசெய்யப்பட்டு, சிறையிலிருக்கிறார் வில்லாயுதம்.
ராமநாதபுரம் மாவட்ட திமுக மீனவரணிச் செயலாளருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தி, பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆவணங்களைக் கைப்பற்றிய சம்பவம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த வில்லாயுதம், திமுக மாவட்ட மீனவரணிச் செயலாளராக இருக்கிறார். மீன் கம்பெனி, ஹோட்டல் எனப் பல தொழில்களைச் செய்துவருகிறார்.
அரசால் தடைசெய்யப்பட்ட கடல் அட்டை, கடல் குதிரை போன்ற அரியவகை கடல் உயிரினங்களை வெளிநாடுகளுக்குக் கடத்திய வழக்கில் இரண்டு மாதங்களுக்கு முன்பு கைதுசெய்யப்பட்டு சிறையிலிருக்கிறார் வில்லாயுதம்.

இந்தநிலையில் ராமேஸ்வரத்திலுள்ள அவருடைய வீட்டுக்கு நேற்று அதிகாலையில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் பல மணி நேரம் சோதனை நடத்தினார்கள்.
வீடு மட்டுமன்றி, அவர் நடத்தும் தங்கும் விடுதி, மீன் கம்பெனியிலும் சோதனை நடத்தினார்கள். மாலை 7 மணி வரை நடந்த சோதனையில், வருவாய் தொடர்பான பல்வேறு ஆவணங்களையும், வரி செலுத்தாமல் பல கோடி ரூபாய்க்கு சொத்துகள் வாங்கிய ஆவணங்களையும் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது.

தற்போது உடல்நலமில்லாமல் சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வில்லாயுதம், பல வருடங்களாக சட்டவிரோதமாக கடல் அட்டை கடத்தும் தொழிலைச் செய்துவருவதாகவும், இவருக்குக் கீழ் மாவட்டத்தில் பலபேர் செயல்படுவதாகவும், இதற்காகப் பல வழக்குகள் இவர்மீது பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் சொல்கிறார்கள்.
இன்னொரு பக்கம் திமுக மீனவரணிச் செயலாளராகவும் அரசியலில் வலம் வந்துகொண்டிருக்கிறார். இந்தநிலையில் மதுரையிலிருந்து சென்ற மண்டல அமலாக்கத்துறை அதிகாரிகள் மாலை வரை சோதனை நடத்தி, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் ஆவணங்களைக் கைப்பற்றி எடுத்துச் சென்றிருக்கிறார்கள்.
இந்தச் சம்பவம் ராமநாதபுரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Source: https://www.vikatan.com/news/crime/enforcement-raid-in-dmk-cadre-home-at-rameswaram