
பங்குச் சந்தை உலகில் ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொரு புத்தகம் பரபரப்பாகப் பேசப்பட்டு விவாதிக்கப்படும். அப்படி இப்போது விவாதிக்கப்படும் புத்தகம், சுச்சிதா தலால் – தேபசீஸ் பாசு சேர்ந்து எழுதிய `அப்சொல்யூட் பவர்’ (Absolute Power – Inside Story of the National Stock Exchange’s Amazing Success, Leading to Hubris, Regulatory Capture and Algo Scam) என்கிற புத்தகம். சுச்சிதா தலால், டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையில் பணியாற்றியபோது, ஹர்ஷத் மேத்தா மோசடியை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தவர்.

பங்குச் சந்தையில் எப்போதெல்லாம் மோசடிகள் நடக்கிறதோ, அப்போதெல்லாம் முதலீட்டாளர்களின் குரலாக சுச்சிதா தலால் பேசுவார். தேபசீஸ் பாசு – பங்குச் சந்தை முதலீட்டாளர்களின் உரிமைகளுக்காக எப்போதும் குரல் கொடுப்பவர். கடந்து 15 ஆண்டுக் காலத்தில் என்.எஸ்.இ எக்ஸ்சேஞ்சில் நடந்த முறைகேடுகளைத் தங்களது இந்த லேட்டஸ்ட் புத்தகத்தின் மூலம் இந்த இருவரும் தெளிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.
தனுஷ் நடித்த மாரி படத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இந்தப் படத்தின் ஹீரோ நல்லவன்தான். ஆனாலும் ரெளடித்தனம் செய்பவன். அவன் கொட்டத்தை ஒழிக்க ஒரு இன்ஸ்பெக்டர் வருகிறான். ஹீரோவை ஓரங்கட்டிய இன்ஸ்பெக்டர், ஹீரோ செய்ததைவிட பல அட்டூழியங்களை செய்கிறான். அந்த இன்ஸ்பெக்டரை ஹீரோ எப்படி ஒழித்துக் கட்டிவிட்டு, பழைய இடத்தைப் பிடிக்கிறான் என்பதுதான் அந்தப் படம்.
என்.எஸ்.இ கதையும் இதேதான். மும்பை ஸ்டாக் எக்ஸ்சேஞ்சைத் திருத்த வந்த நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் (NSE) பிற்பாடு பி.எஸ்.இ.யைவிட எப்படி மோசமாக செயல்பட்டது என்பதுதான் இந்தப் புத்தகம் முழுக்க சொல்லப்பட்டிருக்கிறது.
என்.எஸ்.இ அப்படி என்னதான் செய்தது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும் எனில், முதலில் பி.எஸ்.இ எப்படிச் செயல்பட்டது என்கிற பின்னணிக் கதையைப் பார்ப்போம்.
பி.எஸ்.இ என்னும் புரோக்கர்களின் புகலிடம்
பி.எஸ்.இ ஒரு எக்ஸ்சேஞ்சாக இருந்தாலும் அது புரோக்கர்களால் நடத்தப்பட்டு வந்தது. செயல் இயக்குநர் இருந்தாலும் அவரால் புரோக்கர்களை மீறி செயல்பட முடியாது. அதே போல, பி.எஸ்.இ உறுப்பினர் ஆவதும் எளிது கிடையாது. 1980-களில் பி.எஸ்.இ மெம்பர்ஷிப் பெற நினைத்தால், ஒரு கோடி ரூபாய் தர வேண்டும். மிகச் சிலர் மட்டுமே அந்த எக்ஸ்சேஞ்சில் இருந்ததால், வெளிப்படைத்தன்மை குறைவாக இருந்தது. பங்குகள் செட்டில்மென்ட் ஒழுங்காக இருக்காது. இதனால் முதலீட்டாளர்கள் மற்றும் புரோக்கர்கள் அடிக்கடி திவால் ஆகிவந்தார்கள்.
இந்த எக்ஸ்சேஞ்சில் வெளிப்படைத்தன்மையை உருவாக்க வேண்டும் என்று நினைத்த மத்திய அரசு, ஜி.எஸ்.படேல் தலைமையில் 1987-ம் ஆண்டு ஒரு கமிட்டி அமைத்தது. இந்த கமிட்டி பி.எஸ்.இ-யின் செயல்பாட்டில் பல மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான பரிந்துரைகளைச் செய்தது. ஆனால், எதுவும் நடக்கவில்லை.
